பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணிக்கு ஆதரவு வழங்குவதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கம் தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, February 5, 2021

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணிக்கு ஆதரவு வழங்குவதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கம் தெரிவிப்பு

(நா.தனுஜா)

தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதோடு பல்வேறு விவகாரங்கள் தொடர்பிலும் நீதி வழங்குமாறு வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணிக்கு ஆதரவு வழங்குவதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் அறிவித்துள்ளார்.

காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு, கட்டாய ஜனாஸா எரிப்பு உள்ளடங்கலாக சிறுபான்மையினருடன் தொடர்புபட்ட பல்வேறு விடயங்களுக்கும் நீதியை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கமும் ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதாகக குறிப்பிட்டார். 

அவர், இதுபற்றி மேலும் கூறியதாவது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு நாம் எமது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றோம். இதுவரை காலமும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, நாமும் மேலும் பல சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். 

தற்போது இதற்காக தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளின் கைகளிலேயே உள்ளது.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரை சந்தித்து எமது பிரச்சினைகளை எடுத்துரைத்தோம். 

இலங்கையில் சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நாவின் தூதரகங்கள் இயங்கிய காலப் பகுதியிலேயே இனவழிப்பு நடைபெற்றது என்பதையும் எனினும் இவ்விடயம் தொடர்பில் ஐ.நாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் திருப்திகரமானவையாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினோம்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல தடவைகள் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் கடிதங்களைக் கையளித்த போதிலும், எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. மாறாக இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் அமைதிகாத்து வந்திருப்பதன் ஊடாக அவர்களும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயற்படுவது தெளிவாகின்றது என்றும் ஹனா சிங்கரிடம் கூறினோம். 

இந்நிலையில் எதிர்வரும் ஜெனிவா கூட்டத் தொடரின்போது தமிழர் விவகாரத்தில் அர்த்தமுள்ளதொரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad