இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி என்பது மிகவும் மோசமான வரலாற்றைக் கொண்ட இந்துத்துவ அடிப்படைவாதக் கட்சியாகும் - முன்னிலை சோசலிஸக் கட்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 16, 2021

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி என்பது மிகவும் மோசமான வரலாற்றைக் கொண்ட இந்துத்துவ அடிப்படைவாதக் கட்சியாகும் - முன்னிலை சோசலிஸக் கட்சி

(நா.தனுஜா)

இந்து சமுத்திரத்தினால் சூழப்பட்டிருக்கும் இலங்கையின் அமைவிட முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டே இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி இங்கு அதிகாரத்தை விஸ்தரிப்பதற்கு முற்படுகின்றது. ஏனைய இனத்தவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்த மிகவும் மோசமான வரலாற்றைக் கொண்ட இந்துத்துவ அடிப்படைவாதக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியை நாட்டிற்குள் அனுமதிப்பதென்பது தற்போதுள்ள நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கும் என்று முன்னிலை சோசலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது, இலங்கையிலும் நேபாளத்திலும் பாரதிய ஜனதா கட்சியை நிறுவி, இரு நாடுகளிலும் ஆட்சி அதிகாரத்தை இலக்கு வைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான அமித் ஷா கூறியதாக திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் பிப்லாப் குமார் டெப் தெரிவித்திருக்கிறார். இந்தக் கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

எமது நாடு தற்போது முகங்கொடுத்துள்ள நெருக்கடிகளைப் பொறுத்த வரையில், அவை பெரும்பாலும் தனித்த ஒரு நாட்டின் எல்லைக்குள் தீர்த்துக் கொள்ள முடியாத பிரச்சினைகளாகும். அதற்கு மிகப்பொருத்தமான உதாரணமாக கொரோனா வைரஸ் பரவலைக் குறிப்பிட முடியும். அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருடிக்கடியும் சர்வதேச ரீதியானதாகும். 

சுற்றாடலை எடுத்துக் கொண்டால், அதிகரித்து வரும் பூகோள வெப்பமடைதலால் பல சர்வதேச நாடுகள் பாதிப்படைந்திருக்கின்றன. எனவே இவையனைத்திற்கும் தீர்வை வழங்குவதற்கேற்ற அரசாங்கமொன்றைப் பிரதிபலிக்கும் கட்சியென்பது சர்வதேச மட்டத்திலேயே நிறுவப்பட வேண்டும்.

கம்யூனிஸவாதிகள், இடதுசாரிகளின் கொள்கை அதனடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. எனவே பூகோள ரீதியில் கட்சியொன்று அமைக்கப்பட வேண்டும் என்பதே எமது அபிப்பிராயமாகும். 

ஆனால் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் அதன் கட்சியை விரிவுபடுத்துவதற்கு ஏன் திட்டமிடுகிறது என்ற கேள்வி மிகவும் முக்கியமானதாகும். இந்து சமுத்திரத்தினால் சூழப்பட்டிருக்கும் இலங்கையின் அமைவிட முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டே இந்தியா எமது நாட்டை இலக்கு வைக்கின்றது.

ஆகவே இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி விஸ்தரிக்கப்படுவதனால் இலங்கையினதோ இந்தியாவினதோ அல்லது நேபாள நாட்டினதோ மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் கிட்டாது. 

இந்தியாவின் பல நாட்களாக விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். அந்நாட்டிற்குள் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காமல், ஏனைய நாட்டின் நெருக்கடிகளுக்குத் தீர்வை வழங்குவதற்கு அவர்களால் முடியுமா? மாறாக பாரதிய ஜனதா கட்சியை எமது நாட்டில் வேரூன்ற அனுமதிப்பதால் பிரச்சினைகளே அதிகரிக்கும்.

ஏனெனில், பாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு இந்துத்துவக் கட்சியாகும். அது வெவ்வேறு இன, மதக் குழுக்களுக்கு இடையில் பிளவுகளைத் தூண்டும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வந்திருக்கிறது. 

குறிப்பாக முஸ்லிம்கள் உள்ளடங்கலாக ஏனைய இனத்தவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற மிகவும் மோசமான வரலாற்றைக் கொண்ட இந்து அடிப்படைவாதக் கட்சியாகவே பாரதிய ஜனதா கட்சி விளங்குகின்றது. 

ஏற்கனவே நாட்டில் உள்ள பல்வேறு இன, மதவாத அடிப்படையிலான கட்சிகள் மற்றும் குழுக்கள் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டிற்குள் பாரதிய ஜனதா கட்சியை அனுமதிப்பதென்பது ஆரோக்கியமான விடயமாக அமையாது.

No comments:

Post a Comment