பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
பிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர். ஆலயங்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து கல்விக்காக செலவிட வேண்டுமென பிரதமரின் மட்டு-அம்பாரை விசேட இணைப்புச் செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ச தைப் பொங்கலை முன்னிட்டு நாட்டிலுள்ள 100 ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், காரைதீவு பகுதியிலுள்ள 06 ஆலயங்களின் நிருவாகத்தினருக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில், அன்று தொட்டு தமிழர்களுக்கு என அடையாளமாக இருக்கின்ற ஒரேயொரு சொத்து ஆலயங்களாகும். அந்த ஆலயங்கள் தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். இவைகள் இல்லாத காரணத்தினால் பல ஆலயங்கள் நீதிமன்றில் காலத்தைக் கடத்துகின்றன. முதலில் நாம் ஒற்றுமைப்பட வேண்டும். வழக்குகளுக்கு போகக்கூடாது. இருப்பைப் பாதுகாக்க வேண்டும்.
ஆலயங்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து கல்விக்காகச் செலவிட வேண்டும். அறநெறி வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும். தேர்தல் முடிந்த கையோடு அம்மானைக் காணவில்லையென பலர் விரக்தியிலிருந்ததுண்டு. ஒன்றுமே செய்யவில்லை என்றும் கூறினார்கள்.
உண்மையில் அரசாங்கம் இப்போதுதான் நிலையான கட்டத்திற்கு வந்துள்ளது. இனி நாம் நிறைய வேலைகளை முடிக்கலாம். கொழும்பிற்குச் சென்று பல அமைச்சர்களைச் சந்தித்து வருகிறேன். விரைவில் நல்லவை நடக்கும்.
மதப்பற்றுள்ள பிரதமர். குறிப்பாக, இந்து சமயத்தில் மிகுந்த பக்தி அவரிடமுள்ளது. ஜனாதிபதியும் சாதகமாகவுள்ளார். எனவே, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எதிர்வரும் சித்திரை மாதம் முதல் துறைசார்ந்து கொழும்புக்குச் சென்று பிரதமரை சந்திக்கும் திட்டமுள்ளது. அதற்கு நீங்கள் தயாராக வேண்டும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக அமைச்சர் சமல் ராஜபக்சவிடம் பேசியுள்ளேன். விரைவில் நல்ல பதிலை எதிர்பார்க்கலாம்.
காரைதீவு, திருக்கோவில் வைத்தியசாலைகளைத் தரமுயர்த்தி அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தம்பட்டையில் 500 குடும்பங்களுக்கான பனம்பொருள் உற்பத்திக் கைத்தொழிலை மேம்படுத்த நிலையத்தை ஆரம்பிக்கவுள்ளேன்.
பொத்துவில் 60ஆம் கட்டைப் பிரச்சினை நிறைவுக்கு வந்துள்ளது. அதிலே முயற்சி செய்து 182 குடும்பங்களுக்கு காணியை வழங்க 14 நாள் அறிவித்தல் போடப்பட்டுள்ளது. ஆகவே, அப்பிரச்சினையைத் தீர்த்ததில் மகிழ்ச்சி.
30 வருடங்களாக செய்ய முடியாமலுள்ள வளத்தாப்பிட்டிக்கு அப்பால் எம்மவரின் காணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காரைதீவு வலயம் தொடர்பாகவும் ஜி.எல்.பீரிசிடம் பேசியுள்ளேன். எதற்கும் மக்கள் ஒற்றுமையாக எம்மோடு இணைந்திருங்கள். இனி நல்ல காலம்தான் என்றார்.
இந்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (26) காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன், நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் வே.ஜெகதீசன் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்து சமய கலாசார திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் கு.ஜெயராஜி வரவேற்புரை நிகழ்த்த கலாசாரஉத்தியோகத்தர் என்.பிரதாப் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
No comments:
Post a Comment