இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து, சமிந்த வாஸ் விலகியுள்ள நிலையில், சமிந்த வாஸ் தனது ட்விற்றர் கணக்கில அதற்கு விளக்கமளித்துள்ளார்.
நான் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஒரு தாழ்மையான வேண்டுகோளை விடுத்தேன், அவர்கள் அதை நிராகரித்தனர். இந்த நேரத்தில் நான் சொல்லக்கூடியது அவ்வளவுதான். நீதி ஒரு நாள் வெல்லும்! என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வேகப் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரான டேவிட் செகர், கடந்த 18ஆம் திகதி தன்னுடைய பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், அவருக்கு பதிலாக கடந்த 19ஆம் திகதி சமிந்த வாஸ் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
சமிந்த வாஸ், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணி (22) மேற்கிந்திய தீவுகள் நோக்கி புறப்பட்ட நிலையில், சமிந்த வாஸ் பயிற்றுவிப்பாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
இலங்கை ஏ அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக தொடர்ந்து சமிந்த வாஸ் செயற்பட்டு வந்தார். இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட கொடுப்பனவு தொடர்பிலான சிக்கல்கள் காரணமாக இவர், தன்னுடைய அனைத்து பதவிகளிலிருந்தும் விலகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமிந்த வாஸ் இறுதி தருணத்தில் தன்னுடைய இராஜினாமாவை அறிவித்துள்ள நிலையில், இலங்கை அணி வேகப் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் இல்லாமல் மேற்கிந்திய தீவுகள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணியை பொருத்தவரை, வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமார கொவிட்-19 வைரஸ் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், தற்போது வேகப் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரும் இழக்கப்பட்டுள்ளமை அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment