கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முதல் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களுக்கான இரண்டாவது டோஸ் எதிர்வரும் தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் வழங்கப்படுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நேற்றுமுன்தினம் பதிவான 13 மரணங்களும் 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்றவை அல்ல. சில சந்தர்ப்பங்களில் இரண்டு, மூன்று தடவைகள் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவை கொவிட் மரணங்களாக உறுதிப்படுத்தப்படும். இவ்வாறு உறுதிப்படுத்தப்படும் மரணங்கள் ஒரே தடவையில் அறிவிக்கப்படும். அதனை நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இதேவேளை, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ராசெனிகா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்ட இலங்கையர்களுக்கு அதன் இரண்டாவது டோஸ், தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் வழங்கக் கூடியதாக இருக்கும். அதற்குத் தேவையான தடுப்பூசிகள் இலங்கைக்கு விரைவாக கிடைக்கும்.
இந்த மாத இறுதிக்குள் கொவெக்ஸ் வேலைத்திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பினால் 02 இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment