பொறியில் சிக்கிய சிறுத்தை தப்பியோட்டம் - பதற்றத்தில் பொதுமக்கள் - News View

Breaking

Post Top Ad

Monday, February 15, 2021

பொறியில் சிக்கிய சிறுத்தை தப்பியோட்டம் - பதற்றத்தில் பொதுமக்கள்

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ சீனாகொலை (செப்பல்ட்டன்) தோட்ட எல்லை பகுதியில் பொறியில் சிக்குண்ட சிறுத்தை ஒன்று இன்று (15.02.2021) திகதி அதன் கம்பிகளையும் அறுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளமையினால் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பதற்ற நிலை காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்டத்தில் சீனாகொலை எல்லையில் இன்று காலை தேயிலை கொழுந்து பறிப்பதற்காக சென்ற தொழிலாளர்கள் சிறுத்தை சீறும் சத்தத்தினை கேட்டு அப்பகுதியில் பார்த்த போது ஐந்து அடி நீளமான சிறுத்தைப் புலி ஒன்று பொறியில் சிக்குண்டு தவிப்பதனை கண்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து தொழிலாளர்கள் கூச்சலிட்டு ஓடி பொலிஸாருக்கு தெரிவித்ததனையடுத்து பொலிஸார் நல்லதண்ணீர் வன ஜீவராசி திணைக்களத்திற்கு தெரிவித்துள்ளனர்.

எனினும் வனஜீவராசிகள் அதிகாரிகள் வருவதற்கு முன் குறித்த சிறுத்தைப் புலி கம்பியினை அறுத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்கு ஓடியுள்ளது. இதனால் இந்த சிறுத்தைப் புலி மீண்டும் வந்து மக்களை தாக்கலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக அப்பகுதியில் உள்ள நாய்களை சிறுத்தைப் புலிகள் கொண்டு சென்று தின்று விடுவதாகவும் தேயிலை மலைகளில் சிறுத்தைப் புலிகளின் நடமாற்றம் காணப்படுவதாகவும் இது குறித்து உரிய அதிகாரிகளிடம் அறிவித்த போதிலும் இதுவரை பாதுகாப்பான நடவடிக்கைகள் எதுவம் பெற்றுக் கொடுக்கவில்லை என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தாங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தங்களுடைய தொழில் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது குறித்து உரியவர்கள் உரிய கவனமெடுத்து நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad