நாட்டின் இறையாண்மைக்கு முன்னுரிமை வழங்கி ஜெனிவா விவகாரத்திற்கு தீர்வு - எந்நாட்டுக்கும் அடிபணிந்து செயற்பட வேண்டிய தேவை கிடையாது : அமைச்சர் காமினி லொகுகே - News View

Breaking

Post Top Ad

Sunday, February 21, 2021

நாட்டின் இறையாண்மைக்கு முன்னுரிமை வழங்கி ஜெனிவா விவகாரத்திற்கு தீர்வு - எந்நாட்டுக்கும் அடிபணிந்து செயற்பட வேண்டிய தேவை கிடையாது : அமைச்சர் காமினி லொகுகே

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் இறையாண்மைக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் ஜெனிவா விவகாரத்திற்கு தீர்வு காணும். அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேணுவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக காணப்படுகிறது. இலங்கை தொடர்பில் சர்வதேச அரங்கில் காணப்படும் தவறான நிலைப்பாடு இம்முறை திருத்திக் கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. என்பதை பல முறை சுட்டிக்காட்டியுள்ளோம்.

சர்வதேச நாடுகள் இலங்கையை புறக்கணிக்கும் சூழல் காணப்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு எதிர்தரப்பினர் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள்.

இலங்கை தொடர்பில் பிற நாடுகள் முன்வைக்கும் பிரேரணைகளை முழுமையாக ஆய்வு செய்யும் உரிமை எமக்குண்டு எந்நாட்டுக்கும் அடிபணிந்து செயற்பட வேண்டிய தேவை கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அதாவது 2009 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முதலாவது பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்டது.

2009 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை மனித உரிமை பேரவையிலும், அதன் உறுப்பு நாடுகளுடனும் இணக்கமாகவே செயற்பட்டது.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதாவது தற்போது ஒரு சில முறுகள் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடு பிரதான காரணியாக அமைந்தது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா 30.1 பிரேரணையை 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்தபோது அதற்கு நல்லாட்சி அரசாங்கம் இணையனுசரனை வழங்குவதாக இணக்கம் தெரிவித்தது. இது தேசதுரோக செயற்பாடாக கருதப்பட்டது.

இத்தவறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் திருத்திக் கொள்ளப்பட்டது. 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற கூட்டத் தொடரில் 30.1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகியது.

இதன் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக கடும்போக்கினை கொண்டுள்ளமை பல விடயங்கள் ஊடாக வெளிப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மைக்குட்பட்டு அரசாங்கம் அனைத்து தீர்மானங்கiயும் எடுக்கும் அதற்கான உரிமை அரசாங்கத்துக்கு உண்டு.

அனைத்து நாடுகளுடனும் அரசாங்கம் நல்லுறவை பேணும் இதற்காக நாட்டின் இறையாண்மையினை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. சர்வதேச அரங்கில் இலங்கைதொடர்பில் தவறான நிலைப்பாடு காணப்படுகிறது. இவை இம்முறை திருத்திக் கொள்ளப்படும். தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad