தீர்ப்பு வரும் வரை ரஞ்சன் பாராளுமன்றத்திற்கு அழைக்கப்படமாட்டார் - பிரேமலால் ஜயசேகரவிற்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதத்தை வழங்கவும் - கடும் வாதப் பிரதிவாதம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

தீர்ப்பு வரும் வரை ரஞ்சன் பாராளுமன்றத்திற்கு அழைக்கப்படமாட்டார் - பிரேமலால் ஜயசேகரவிற்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதத்தை வழங்கவும் - கடும் வாதப் பிரதிவாதம்

நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்திற்கு அழைக்கப்படமாட்டார் என, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அவைக்கு தெரிவித்தார்.

இன்று (10) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது, எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த சபாநாயகர் இதனை அறிவித்தார்.

4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, தாங்கள்  3 வாரங்களில் பதிலளிப்பதாக தெரிவித்த நிலையில், தற்போது 3 வாரங்கள் கழிந்துள்ளதாகவும் அதற்கான பதிலை தற்போது எதிர்பார்ப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிரணியிலிருந்து பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கொலைக் குற்றத்திற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரேமலால் ஜயசேகரவுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமையை, ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

குறித்த வழக்கு தற்போது மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளதால், அது தொடர்பில் தற்போது முடிவை எடுக்க முடியாது எனவும், அது தொடர்பான இறுதி முடிவை நீதிமன்றம் அறிவித்ததும், அதற்கான நீண்ட காலத்திற்கான தீர்வை வழங்கவுள்ளதாக, சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

கொலைக் குற்றச்சாட்டு நிரூபணமான ஒருவரை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான கலாசாரத்தை கொண்டு வந்தது நீங்கள் தான் என, சபாநாயகரிடம் தெரிவித்த லக்‌ஷ்மன் கிரியெல்ல, அதனையே தொடருமாறே தாங்கள் கோருவதாக தெரிவித்தார்.

இதன்போது மீண்டும் சபாநாயகரிடம் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, அரசியல் மற்றும் குடியுரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதனாலும், அது தொடர்பான பாராளுமன்ற சட்டமும் உள்ளதன் காரணத்தினாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில், எந்தவொரு குற்றம் தொடர்பிலும் மேன்முறையீட்டை மேற்கொள்ளலாம் என்பதால், அவ்வாறான மேன்முறையீடொன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உள்ள நிலையில், அதனை நீதிமன்றம் தீர்மானிக்கும் எனவும், அதுவரை ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர உங்களுக்கு அதிகாரம் உள்ளதெனத் தெரிவித்தார்.

அத்துடன், சபாநாயகருக்கு பாராளுமன்றத்தில் உரிய தீர்மானத்தை எடுப்பதற்கான உரிமை உண்டு எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, நாளைய தினமே (11) ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு அழைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

ஆயினும், எந்தவொரு நபருக்கும் விசேட வரப்பிரசாதம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த சபாநாயகர், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அதற்கான முடிவை எடுக்கவுள்ளதாக வலியுறுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த டிலான் பெரேரா, தற்போது உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அமைய, ரஞ்சன் ராமநாயக்க சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மேன்முறையீடும் நிலுவையில் உள்ளது எனவே அதனை அவ்வாறே பேண வேண்டும் என்றார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்பில் கடந்த ஜனவரி 12ஆம் திகதி, உச்ச நீதிமன்றினால்  4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநயாக்க, தனது எம்.பி. பதவியை வெற்றிடமாவது தொடர்பில் தேர்தல்கள் செயலத்திற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி வரை, ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி. பதவி தொடர்பிலான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாமென, மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற பொதுச்செயலாளருக்கு உத்தரவை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடததக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad