நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் - அடக்கத்திற்கு அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் - அடக்கத்திற்கு அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதாக வழங்கப்பட்ட உத்தரவாதத்தை நம்பியே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும் ஆனால் தொடர்ந்து அந்த விடயம் இழுத்தடிக்கப்படுவதாகவும் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். 

ஆனால் கொரோனாவினால் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீடம் நேற்றுமுன்தினம் (13) கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கூடியது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

இந்த நிலையில் 20 ஆவது அரசியல் அமைப்பிற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியிலும், பொது மக்களிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

உயர்பீட கூட்டம் காரசாரமாக இருந்ததாகவும் நிபந்தனை எதுவுமின்றி 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியது குறித்தும் உயர்பீட உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதாக அறிய வருகிறது.

எமது சமூகம் முகங்கொடுக்கும் ஜனாஸா எரிப்பு உட்பட பல பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடனும், பிரதமருடன் பேசினோம். அமைச்சர்கள் உட்பட சுகாதார தரப்பினருடனும் பல தடவை பேசினோம். ஆனாம் எமக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவில் இருந்து ஒரேயடியாக ஒதுங்குவது பாதகமாக அமையும் எனவும் அவர்கள் கூறியதாக அறிய வருகிறது.

உயர்பீட கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கட்சித் தலைவர் ரவூப் ஹக்கிம், தங்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக 20 ஆவது அரசியல் அமைப்பிற்கு ஆதரவளித்த எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். அதற்கு எமது உயர்பீடம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. இந்த தவறுக்கு பொதுமக்களிடத்தில் மன்னிப்பு கேட்பது அவசியம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. 

அதற்கு 20 ஐ ஆதரித்த உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டனர் அவர்களின் செயற்பாடு குறித்து எமது உயர்பீடம் கவலையடைகின்றது´ என்றார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த எம்.எஸ்.தௌபீம் எம்.பி, ஜனாஸா எரிப்பு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணவே ஆதரவு வழங்கினோம். வேறு எந்த சலுகையும் எதிர்பார்த்து நாம் அரசை ஆதரிக்கவில்லை. 

மூன்றில் இரண்டு பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவு அரசுக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயத்தை மாற்றும் வகையில் நாம் ஆதரித்தோம். ஆனால் எமது கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்படுவது கவலையாக இருக்கிறது என்றார். 

இதன்போது 20 ஐ ஆதரித்த முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எச்.எம்.எம் ஹரிஸ், எம்.எஸ் தௌபீக் மற்றும் ஹாபிஸ் நஸீர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 

இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் பீடம் அதன் தலைவர் ரிசாத் பதியுதீன் தலைமையில் கூடியது. இதன் போதும் 20 ற்கு ஆதரவு வழங்கிய எம்.பிக்கள் குறித்து ஆராயப்பட்டதாக அறிய வருகிறது. 

தினகரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad