ஆயிரம் ரூபா வழங்க இலகுவான வழி இருக்கும்போது, அரசாங்கம் அதனை செய்யாமல் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றவே முயற்சிக்கின்றது - விஜித ஹேரத் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

ஆயிரம் ரூபா வழங்க இலகுவான வழி இருக்கும்போது, அரசாங்கம் அதனை செய்யாமல் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றவே முயற்சிக்கின்றது - விஜித ஹேரத்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்கு இல்லை. அவ்வாறு இருக்குமாக இருந்தால் அடிப்படை சம்பள திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அதனூடாக வழங்க முடியும். அத்துடன் அரசாங்கம் தற்போது எடுத்திருக்கும் தீர்மானத்திற்கமைய 100 ரூபா வாழ்க்கை செலவு கொடுப்பனவை வழங்குவதற்கும் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொழில் அமைச்சின் கீழ் ஊழியர் சகாய நிதியச்சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா கோரிக்கை இன்று நேற்று வந்ததொன்று அல்ல. 10 வருடங்களுக்கு முன்பிருந்தே தெரிவிக்கப்படுகின்ற விடயமாகும். எந்த அரசாங்கமும் அதனை நிறைவேற்றவில்லை. 

தற்போதைய அரசாங்கமும் தேர்தலுக்கு முன்னரே மார்ச் மாதத்தில் இருந்து ஆயிரம் ரூபா வழங்குவதாக பிரதமர் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் வரவு செலவு திட்டத்தில் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து ஆயிரம் ரூபா வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். தற்போதும் உறுதியான தீர்மானம் இல்லாமலே இருக்கின்றது.

மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்ற தேவை இருந்தால் அதற்கு இலகுவான வழி இருக்கும்போது, எதற்காக அதனை சுற்றிவந்து நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

அடிப்படை சம்பள திருத்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளொன்றுக்கு வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றலாம். ஆனால் அரசாங்கம் அதனை செய்யாமல் தொழிலாளர்களை ஏமாற்றவே முயற்சிக்கின்றது.

அத்துடன் 900 ரூபா அடிப்படைச் சம்பளம் மற்றும் 100 ரூபா வாழ்கைச் செலவு என்ற என்ற விடயத்துக்கு முதலாளிமார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவ்வாறான நிலையில் அரசாங்கம் இதனை வர்ததமானி படுத்திய பின்னர் அவர்கள் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றால் என்ன செய்வது?. 

இது இன்னும் நீடிக்கப்படும். பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ஆயிரம் ரூபா வழங்க முடியாது என தெரிவித்து அரசாங்கம் தப்பித்துக் கொள்ளவே முயற்சிக்கின்றது. இல்லாவிட்டால் இலகுவான முறையில் ஆயிரம் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

அதேபோன்று வாழ்க்கைச் செலவு 100 ரூபா வழங்குவதாக இருந்தாலும் அரசாங்கம் அதற்கான அனுமதியை பாராளுமன்றத்தில் பெற வேண்டும். ஏனெனில் கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் அதனை மேற்கொள்ள முடியாது. 

அதேபோன்று அரசாங்கம் தெரிவிக்கும் ஆயிரம் ரூபாவை முதலாளிமார் வழங்குவதாக இருந்தால் 13 நாட்களே வேலை வழங்குவதாக முதலாளிமார் தெரிவித்திருக்கின்றனர். அவ்வாறான தீர்மானம் எடு்த்தால் அரசாங்கம் எடுக்கும் சட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக எந்த தீர்மானமும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad