சுதந்திர தின உரையை போன்றல்லாது பொதுஜன பெரமுனவின் வருடாந்த சம்மேளனத்தில் ஆற்றும் உரையாகவே காணப்பட்டது - முஜிபுர் ரஹ்மான் - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

சுதந்திர தின உரையை போன்றல்லாது பொதுஜன பெரமுனவின் வருடாந்த சம்மேளனத்தில் ஆற்றும் உரையாகவே காணப்பட்டது - முஜிபுர் ரஹ்மான்

(எம்.மனோசித்ரா)

கிழக்கு முனைய விவகாரத்தில் ஏற்பட்ட சுமூகமற்ற நிலை காரணமாக இந்தியா வழங்கிய கடன் தொகையை உடனடியாக மீள செலுத்துமாறு அறிவித்துள்ளது. தற்போது இலங்கையில் உள்நாட்டு நெருக்கடி மாத்திரமின்றி சர்வதேச நெருக்கடிகளும் ஆரம்பமாகியுள்ளன. சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், சுதந்திர தின உரையை போன்றல்லாது பொதுஜன பெரமுனவின் வருடாந்த சம்மேளனத்தில் ஆற்றும் உரையாகவே காணப்பட்டது. நாடு தொடர்பில் பொதுவாக பேசாமல் வழமையைப் போன்று அரசியல் பேசுகின்றார். அவரது உரையிலிருந்தே நாட்டின் எதிர்காலத்தை அறிந்து கொள்ள முடியும்.

தற்போது உள்நாட்டு நெருக்கடி மாத்திரமின்றி சர்வதேச நாடுகளுடனான நெருக்கடிகளும் தோற்றம் பெற்றுள்ளன. மீண்டும் எமது நாடு சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கிழக்கு முனைய விவகாரத்தினால் 2022 இல் திருப்பி கொடுக்கப்படவிருந்த கடன் தொகையை இந்தியா உடனடியாக செலுத்தும்படி அறிவித்துள்ளது. இவ்வாறிருக்க மறுபுறத்தில் சீன ஆதிக்கம் அதிகரித்துச் செல்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது மனித உரிமை மீறல், இராணுவ ஆட்சி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே ஜனாதிபதியால் புதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்வதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சஹரானுக்கு கீழ் மட்டத்திலிருந்து செயற்பட்டவர்களை கைது செய்யும் அரசாங்கத்திற்கு அவருக்கு மேலுள்ளவர்களை கைது செய்வதற்கான தேவை இல்லை என்பது தெளிவாகிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad