இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் : இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 4, 2021

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் : இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்றுக் கொள்ள முடியாத செயல். இது குறித்து இலங்கை அரசிடம் மிகக் கடுமையான முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் உரையாற்றிய மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் இலங்கை கடற்படையினர் சமீபத்தில் தமிழக மீனவர்கள் 4 பேரை கொலை செய்ததாகக் கூறி அது தொடர்பாக பிரச்சினை எழுப்பினர்.

திருச்சி சிவா உரையாற்றுகையில், கடந்த மாதம் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் காணாமல் போனார்கள். அடுத்த 4 நாட்களுக்குப் பின்னர் மீனவர்களின் உடல்கள், பாக் ஜல சந்தி பகுதியில் மிதப்பதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். தங்கள் கடற்படை ரோந்துக் கப்பலுடன் தமிழக மீனவர்களின் படகு மோதி விட்டதாகத் தெரிவித்தனர். ஆனால் உண்மை அதுவல்ல. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு அவர்களிடம் இருந்த மீன்கள் பறிக்கப்பட்டுள்ளன. இது முதல்முறை அல்ல. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இதை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது வரவேற்கத்தக்கது.

இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தவிர்த்து, மீனவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மீனவர்கள் விவகாரத்துக்கு அதிமுக உறுப்பினர் தம்பிதுரையும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 245 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். முன்பெல்லாம் தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் கைது செய்யும். அவர்களை இந்திய அரசு மீட்டு வந்தது. ஆனால், தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் கொன்றது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார். மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை பிரதமர் மோடி கண்டிப்பதுடன், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதே கோரிக்கையை மற்ற தமிழக உறுப்பினர்களும், பல்வேறு மாநில உறுப்பினர்களும் வலியுறுத்தினர். இது குறித்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றுகையில், தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படை விவகாரம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுவரை இதற்குத் தீர்வு காண முடியவில்லை. அடுத்தடுத்து வந்த அரசுகள் தங்களால் முடிந்த அளவு பணிகளைச் செய்துள்ளன. ஆனால், பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

இதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதிலளிக்கையில், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற நிகழ்வுகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இது தொடர்பாக இலங்கை அரசிடம் இந்தியா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad