அரசாங்கம் இனவாத கொள்கையினை முன்னிலைப்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை முடக்குகிறது - முஜ்புர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 23, 2021

அரசாங்கம் இனவாத கொள்கையினை முன்னிலைப்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை முடக்குகிறது - முஜ்புர் ரஹ்மான்

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் இனவாத கொள்கையினை முன்னிலைப்படுத்தி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளை முடக்குகிறது. கடந்த ஒரு வருட காலமாக முஸ்லிம் சமூகத்தினரது உடல்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கு முரண் என்பதை நன்கு அறிந்தும் இனவாதிகளின் நோக்கத்திற்காக முழு அரசாங்கமும் ஒன்றினைந்து செயற்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் முஜ்புர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுக் காரணமாக மரணிக்கின்ற ஜனாஸாக்களை பலவந்தமாக எரிக்கின்ற விடயத்தை எதிர்த்து நேற்று செவ்வாய்கிழமை (23) தேசிய அமைப்புக்களினால் ஒழுங்குசெய்யப்பட்ட அமைதிப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்கள் அனைவரது உரிமைகளையும் பாதுகாப்பது ஜனாதிபதியின் பொறுப்பாகும். ஆனால் அவர் தமிழ் பேசும் மக்கள் மற்றும் அவர்களின் உரிமை குறித்து அக்கறை கொள்ளவில்லை.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்வதற்கு பாராளுமன்றிற்குள்ளும், வெளியிலும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்களை புதைப்பதா அல்லது தகனம் செய்வதா என்ற விடயத்தில் எழுந்துள்ள முரண்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் வைத்திய துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு கடந்த வருடம் நியமிக்கப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை சுகாதார பாதுகாப்பு வழிமுறைக்கு அமைய அடக்கம் செய்யலாம். இதனால் பௌதிக காரணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வைத்திய நிபுணர்கள் கடந்த டிசெம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியும், அதற்கு அனுமதி வழங்குவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் குறிப்பிட்டார். ஆனால் பிரதமரின் தீர்மானத்தை ஏனைய தரப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரதமரின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் ஒரு தரப்பினர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயப்படுகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் இஸ்லாமிய நாடுகளிடம் தஞ்சம் புகுந்துள்ளது.

நாட்டுக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கானிடம் இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து குறிப்பிட அனுமதி கோரியிருந்தோம். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கப் பெறவில்லை. 

பாகிஸ்தான் பிரதமர் முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்காமலிருக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்கிறது. எமது உரிமையினை பெற்றுக் கொள்ள தொடர்ந்து போராடுவோம்.

No comments:

Post a Comment