ஐ.ஏ. காதிர் கான்
இலங்கை 73 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தமிழ்ப் பேசும் மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாழ்விலும் சுதந்திரக் காற்று வீச வேண்டும். அனைவரும் அனைத்து உரிமைகளையும் பெற்று, இலங்கையில் சுதந்திரமாக வாழும் நிலை உருவாக வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தையும், அவர்களுக்கான உரிமைகளுடனான பூரண சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடப்பாடும் எம்மைப் போன்ற தமிழ்ப் பேசும் முஸ்லிம் தலைவர்களுக்கு உண்டு. அதனை நாம் கட்டாயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா, தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை 73 ஆவது சுதந்திர தினத்தில் காலடியெடுத்து வைத்துள்ள போதிலும், கொவிட்டினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் முஸ்லிம்கள் தமது உரிமையைப் பெற்றுக் கொள்ள இன்னமும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கொவிட்டினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என, உலக சுகாதார அமைப்பு உட்பட, சர்வதேச ரீதியில் 190 க்கும் மேற்பட்ட நாடுகள் அனுமதி அளித்திருப்பதை நாம் அறிவோம். இந்நிலையில், இலங்கை அரசாங்கம் அதனை அனுமதிக்காமல், சுகாதார துறையின் மீது சாட்டிவிட்டு காய் நகர்த்தி காலம் கடத்தி வருகின்றது.
மரணிப்பவர்களை அடக்கம் செய்வதென்பது, முஸ்லிம்களின் மத அடிப்படையிலான உரிமையாகும். அந்த உரிமையைப் பெற்றுக் கொள்ள, இன்றைய சுதந்திர தினத்தன்று நாம் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து எம்மாலான முடிந்த முயற்சிகளை மேற்கொள்வதோடு, அதற்காக வேண்டி பிரார்த்திப்போமாக.
இலங்கைத் தீவுக்குள் நாம் சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் சமூகம் என்ற வகையில், முஸ்லிம்களுக்கு எந்த வகையிலும் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் நாம் எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இதுவே நாம் செய்யும் சாதுர்யமான மிகச் சிறந்த நடவடிக்கையாகும்.
எனவே, கொவிட் வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்ற பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வு, மிக விரைவில் கிடைக்கும் என, இன்றைய சுதந்திர தினத்தில் நாம் உறுதியாக நம்புகின்றோம். இதற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் நிச்சயம் கை கொடுத்து உதவுவார்கள் என விசுவாசிக்கின்றோம்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது ஆசீர்வாதத்துடன் எமது உரிமைகள் மீண்டும் கிடைக்கப் பெறுவதற்கும் சமாதானம், சந்தோஷம், சகோதரத்துவத்துடன் சுதந்திரத்தின் உன்னத உணர்வை இலங்கை வாழ் மக்கள் மேலோங்கச் செய்வதற்கும், இன்றைய சுதந்திர தினத்தன்று பிரார்த்திப்போமாக.
சுதந்திர இலங்கையில், அனைத்து இன மக்களும் சுதந்திரம் பெற்ற மக்களாக வாழ வேண்டும். அதற்கான திடசங்கற்பத்தை இன்றைய சுதந்திர தினத்தில் மேற்கொள்வோம்!
No comments:
Post a Comment