(செ.தேன்மொழி)
றாகம பகுதியில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 15 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்துடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, றாகம பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 750 கிராம் ஐஸ் போதைப் பொருளும் 15 இலட்சத்து 20 000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர் போதைப் பொருள் கடத்தல் ஊடாகவே இந்த பணத்தை பெற்றுக் கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, தெஹிவலை பகுதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் தலைமையிலான குழுவினராலே மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை பகுதியிலும் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், இதன்போது காரில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 43 கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 4 தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெல்லம்பிடி மற்றும் ஜம்பட்டா வீதி பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment