தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை உண்டு - ஒற்றை ஆட்சியை ஒருபோதும் ஏற்கவே முடியாது - சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு அவசியம் - ‘13’ இற்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு முக்கியம் - பிராந்திய சபைகளுக்கு காணி அதிகாரம் தேவை : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை உண்டு - ஒற்றை ஆட்சியை ஒருபோதும் ஏற்கவே முடியாது - சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு அவசியம் - ‘13’ இற்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு முக்கியம் - பிராந்திய சபைகளுக்கு காணி அதிகாரம் தேவை : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

(ஆர்.ராம்)

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது வடக்கு கிழக்கினை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்கள் உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கொண்டவர்கள் என்ற வகையில் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவமாக வாழ்வதற்காக சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப்பகிர்வு செய்யப்படுவதன் ஊடாகவே நீண்ட காலமாக புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படாது, அதிகாரங்கள் பகிரப்படாது உள்ளக சுயநிர்ணய உரிமை மறுதலிக்கப்பட்டு பெரும்பான்மையை மையப்படுத்தி பேரினவாதத்தினை தோற்றுவிக்கும் ஒற்றை ஆட்சிமுறை தொடர்ந்தால் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோரும் நிலைமைக்கு தமிழர்கள் தள்ளப்படுவார்கள். அவ்விதமான நிலைமைகள் எமது மடிகளிலேயே இயல்பாகவே வந்து வீழ்ந்துவிடும். அதன் பின்னர் எம்மை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி பழிகூறிவிடாதீர்கள் என்றும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய அரசியலமைப்பினை வரைவதற்கு முன்னதாக அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திற்கும் பரிந்துரைகளை உள்ளடக்கிய உத்தேச வரைவொன்றை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவிற்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றிருந்தது.

முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமான இந்தக் கலந்துரையாடலில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை.சோ.சேனாதிராஜா, தருமலிங்கம் சித்தார்த்தன், ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது புதிய அரசியலமைப்புக்கான தேவைப்பாடு, நாட்டின் தன்மை, அதிகாரப்பகிர்வின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விடயப்பரப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்றிருந்தன.

குறிப்பாக, நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களால் அதிகாரப்பகிர்வு, 13ஆவது திருத்தச்சட்டம், காணி அதிகாரங்கள் தொடர்பில் அதிகளவான வினாக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடத்தில் வினப்பட்டதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும், அதிகாரப்பகிர்வு தொடர்பில் தமது இறுக்கமான நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நிபுணர் குழுவினருடனான இரண்டு மணி நேர சந்திப்பின்போது கூட்டமைப்பினரால் வலியுறுத்திக் கூறப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட முக்கிய விடயப்பரப்புக்கள் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது,

அரசியலமைப்பின் அவசியம்
தமிழ் மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள். அவர்கள் வடக்கு கிழக்கினை தாயமாக கொண்ட பூர்விக இனத்தவர்கள். அத்தகைய இனக்குழுமத்தின் பங்கேற்பு இல்லாத நிலையிலேயே இந்த நாட்டில் இதுவரையில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு குடியரசு அரசியலமைப்புக்களும் காணப்படுகின்றன.

70 ஆண்டுகளுக்கு அதிகமாக தமது உரிமைகளுக்காக போராடிவரும் இனமொன்றின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யப்படுவதற்கும் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அந்த இனக்குழுமத்தினர் கௌரவமாக வாழ்வதற்கும் உரிய உறுதிப்பாடுகள் அரசியலமைப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

தற்போதுள்ள அரசியலமைப்பானது பல சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதனால் அது செல்லுபடியற்ற நிலையிலேயே உள்ளது. ஆகவே புதிய அரசியலமைப்பொன்று நாட்டுக்கு தேவையாக உள்ளது.

அவ்வாறு உருவக்கப்படும் புதிய அரசியலமைப்பில் தமிழ் தரப்பினை புறமொதுக்கி அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து விடமுடியாது.

உள்ளக சுயநிர்ணயம்
தமிழ் மக்கள் உள்ளக சுயநிர்ணய உரிமைகளைக் கொண்டவர்கள். அவர்களுக்கு மொழி, கலாசாரம், பண்பாடு, தேசம் என்பன தனித்துவமாக காணப்படுகின்றது. அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமாக வாழ்வதற்காகவும் ஏனைய இனங்களுக்கு காணப்படும் உரித்துக்களை கொண்ட சமத்துவமான இனக்குழுமமாக தமது பிரதேசங்களில் தமது விடயங்களை தாமே தீர்மானிக்கும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றே கோருகின்றனர்.

அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அரசியலமைப்பு காணப்பட வேண்டும். அவ்வாறு இல்லாது, புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் அந்த இனக்குழுமத்தினை புறமொதுக்கும் வகையிலோ அல்லது அவர்களின் பங்கேற்பினையே நிராகரிக்கும் பட்சத்தில் சர்வதேச நியமனங்களுக்கு அமைவாக வெளியக சுயநிர்ணய உரித்தை கோருவதற்கான முழுமையான உரிமைகளையும் ஒருங்கே கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறு வெளியக சுயநிர்ணய உரிமையை தமிழர்கள் கோருகின்றபோது அல்லது அவ்விதமான நிலைமையையொன்று எமது மடிகளில் இயல்பாகவே வந்து விழும். அப்போது நாம் அதனை எமது மக்களுக்காக கையிலெடுக்க வேண்டிய ஏற்படும். அவ்விதமான நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

ஒருவேளை புதிய அரசியலமைப்புச் செயற்பாட்டிலும் நேர்மறையான நிலைமை ஏற்படுமாயின் அதன் பின்னர் மேற்கூறிய வெளிய சுயநிர்ணயத்தினை கோரும் நிலை உருவாகும் போது எம்மை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திப பழிகூறிவிடாதீர்கள்.

ஒற்றை ஆட்சி
இந்த நாடு பல்லின சமூகங்கள் வாழும் நாடாகும். ஆகவே நாட்டின் தன்மையானது ஒற்றையாட்சிக் கட்டமைப்பாக இருக்க முடியாது. நாட்டின் தன்மையானது ஒற்றையாட்சிக் கட்டமைப்பாக இருக்கின்றபோது அது பெரும்பான்மையான இனத்தினை மையப்படுத்திய ஆட்சியை முன்னெடுப்பதற்கே வழிசமைக்கும். இதன் காரணமாக பெரும்பான்மை வாதம் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் அது பேரினவாதமாக கூர்ப்படையும். சமகால நிலைமைகள் அவ்விதமாகவே செல்கின்றன. ஆகவே நாட்டின் தன்மையானது ஒற்றையாட்சிக் கட்டமைப்பாக இருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சமஷ்டி கட்டமைப்பு
ஆகவே நாட்டின் தன்மையானது பிரிக்க முடியாதரூபவ் பிளவு படுத்த முடியாத வகையிலான ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலானதாக அமைய வேண்டும். சமஷ்டி என்பது பிரிவினை வாதம் அல்ல. இது உள்நாட்டு நீதிமன்றத் தீர்ப்புக்களிலேயே உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருப்பதன் காரணமாக தம்மைத்தமே ஆளுவதற்கான உரித்தினையும் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் அதற்குரிய தீர்மானங்களை எடுக்கும் வகையிலான அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

அவ்விதமான அதிகாரப்பகிர்வுவொன்று செய்யப்படுவதன் ஊடாகவே நீண்டகாலமாக விடுதலைக்காக போராடி வரும் இனக்குழுமத்தினது அபிலாஷைகளையும் முழுமையாக பூர்த்தி செய்ய முடியும்.

மேலும் மத்தியில் அதிகாரங்கள் குவிந்திருப்பதானது பல்லின நாட்டுக்கு பொருத்தமற்றதும் ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானதும் ஆகும். ஆகவே அதிகாரங்கள் பரந்து பட்ட அளவில் மக்கள் மட்டத்தில் பகிரப்பட வேண்டியது அவசியமாகும்.

13ஆவது திருத்தச்சட்டம்
13ஆவது திருத்தச்சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பது எமது ஆரம்பத்திலிருந்தான நிலைப்பாடாகும். மேலும் 13ஆவது திருத்தச்சட்டமான மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அதுகுறித்த எமது நிலைப்பாட்டினை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்திக்கு எழுத்துமூலமாக அனுப்பி வைத்திருந்தோம்.

அச்சந்தர்ப்பத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தவிடத்தில் எமது எழுத்துமூலமான விடயம் சம்பந்தமாக இந்தியப்பிரதமர் ரஜீவ் காந்தி கலந்துரையாடினார். அதன்போது 13 இற்கு அப்பாற் சென்று தமிழர்களுக்கான அதிகாரங்களை பகிர்ந்தளிப்போம் என்று ஜே.ஆர் உறுதிமொழி வழங்கியிருந்தார். இருப்பினும் அவர் அதனை நடைமுறைச் சாத்தியமாக்கவில்லை.

அதன் பின்னர் ரணசிங்க பிரேமதாஸ ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டபோது 13ஆவது திருத்தத்திற்கு அப்பாற் சென்று அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் வாக்குறுதிகளை இந்தியாவுக்கும் தமிழ்த் தலைவர்களும் வழங்கினார். ஆனால் அவரும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

அதன்பின்னர் சந்திரிகா அம்மையாரும் அதனையொத்த வாக்குறுதியை வழங்கினார். அவர் அதுதொடர்பில் கரிசனை கொண்டு பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற பெயரில் அதிகாரப்பகிர்வுகள் அடங்கிய தீர்வுப் பொதியைத் தயாரித்தார். அதற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருந்தது.

அவ்வாறு அனுமதி அளித்த அமைச்சரவையில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர்களாக நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் என்பதும் முக்கியமான விடயம்.

துரதிஷ்டவசமாக அந்த தீர்வுப் பொதியை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது போய்விட்டது. அந்த தீர்வுப்பொதியானது 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பாற் சென்று பிராந்தியங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாகவும் சமஷ்டித்தன்மைகள் நிறைந்ததாகவும் காணப்பட்டது.

அதன் பின்னர் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடி ஆகியோருக்கும் ஏனைய பல தலைவர்களுக்கும் தனது கடந்த ஆட்சியின்போதும் தற்போதைய ஆட்சிக்காலத்திலும் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பாற் சென்று தீர்வு வழங்குவேன் என்று கூறியுள்ளார்.

2015 இல் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த மைத்திரிபால - ரணில் கூட்டு அரசாங்கமும் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பாற் சென்று தீர்வளிப்பதாக கூறியதோடு புதிய அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து இடைக்கால அறிக்கையொன்று வெளியாகும் வரையில் முன்னெடுத்திருந்தது. ஆகவே 13ஆவது திருத்தச்சட்டத்தின் அப்பாற் சென்று அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை அனைத்து தலைவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பது உறுதியாகின்றது.

காணி அதிகாரங்கள்
இதனைவிடவும் காணி அதிகாரங்கள் சம்பந்தமாக பண்டா - செல்வா ஒப்பந்தத்திலும் டட்லி செல்வா ஒப்பந்த்திலும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பிராந்திய சபைகளின் கீழாக காணி அதிகாரங்கள் காணப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. டட்லி - செல்வா ஒப்பந்தத்தில் அந்த விடயம் சற்று விரிவாக காணப்படுகின்றது. எவ்வாறாயினும் பண்டா-செல்வா ஒப்பந்த்தினை அடியொற்றியதாக காணி அதிகாரங்கள் பிராந்திய சபைகளித்தில் காணப்பட வேண்டியது அவசியமாகின்றது.

இதனையடுத்து இரண்டாவது சபை அல்லது செனட் சபை மொழிப்பயன்பாடு மாகாண சபை அதிகாரங்களுக்குள் மத்திய அரசாங்கத்தின் தலையீடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கூட்டமைப்பினரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment