இதுவரை 11,000 ற்கும் அதிகமான கைதிகள் விடுதலை, வெசாக் தினத்தில் மேலும் ஒரு தொகையினர் விடுதலை என்கிறார் அமைச்சர் லொஹான் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 7, 2021

இதுவரை 11,000 ற்கும் அதிகமான கைதிகள் விடுதலை, வெசாக் தினத்தில் மேலும் ஒரு தொகையினர் விடுதலை என்கிறார் அமைச்சர் லொஹான்

சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் 11,000 ற்கும் அதிகமானோர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். 

மேலும் ஒரு தொகை சிறைக் கைதிகளை எதிர்வரும் வெசாக் பண்டிகை தினத்தன்று விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை ஏற்ற சமயம் 30,000 சிறைக் கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்ததாக தெரிவித்துள்ள அவர், இதுவரை அதனை 18,000 ஆக மட்டுப்படுத்த முடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளையே தடுத்து வைத்திருக்க முடியும். கடந்த சுதந்திர தினத்தன்று 167 சிறைக் கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர். 

அதேவேளை இந்த செயற்பாடுகளுக்காக 4 வருட மீளாய்வு என ஒரு சட்டம் உள்ளது அந்த சட்டம் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்தது. அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளோம். 

அதற்கிணங்க மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் ஆயுள் கைதிகளாக தண்டனையை குறைப்பதற்கும் ஆயுள் கைதிகளாக உள்ள சிறைக் கைதிகளை இருபது வருடங்களுக்கு தண்டனை காலத்தை குறைக்கவும் அந்த மீளாய்வு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

அதற்கிணங்க சிறைக் கைதிகளின் நடத்தைகளை கண்காணித்து சுமார் பதினைந்து பதினாறு வருடங்கள் தண்டனையை அனுபவித்து வருபவர்கள், அதேவேளை 65 வயதிற்கு மேற்பட்ட சிறைக் கைதிகள் ஆகியோரையும் அதன்மூலம் விடுதலை செய்ய முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் வெசக் பண்டிகைக்கு முன்னதாக மேற்படி நான்கு ஆண்டு மீளாய்வு சட்டத்தை மீள பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை உண்டு என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment