மாவனல்லை பிரதேசத்தில் கல்குவாரி ஒன்றில் வெடி பொருட்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துஷான் பின்னகொல்ல (49), சுகத் வீரசிங்க (36), சுகத் கிம்ஹான (21), சரத் பண்டார ஆகிய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், தீவிரவாதத் தாக்குதல் மேற்கொள்வதற்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்டுக்கதைகள் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாவனல்லை, ஹிங்குல, மொல்லிகொட பிரதேசத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில், கடந்த டிசம்பர் 22ஆம் திகதி இரவு வெடி பொருள் களஞ்சியசாலை ஒன்றில் பல்வேறு வெடி பொருட்கள் களவாடப்பட்டிருந்தன.
களவாடப்பட்ட வெடிபொருட்கள்
அமோனியா நைட்ரேட் வகை 15 கிலோ கிராம்
வோட்டர் ஜெல் 6
சேவை நூல் 35
டெட்டனேட்டர் 20
கல் உடைக்கும் பீம் 5
வெடிப்பை ஏற்படுத்தும் குறித்த பொருட்கள் களவாடப்பட்டமை தொடர்பில் கடந்த டிசம்பர் 23ஆம் திகதி குறித்த கல்குவாரியின் உரிமையாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மாவனல்லை பொலிஸ் பொறுப்பதிகாரியினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குறித்த கல் குவாரியில் பணிபுரியும் பேராதெனியவைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை மாவனல்லை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய குறித்த விசாரணை பின்னர், குற்றப் புலனாய்வு திணைகளத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டதோடு, குறித்த சந்தேகநபரும் CID யினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் அடிப்படையில், இன்று (02) மேலும் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணதெரிவித்தார்.
தற்போது கைது செய்யப்பட்டவர்கள், ஏற்கனவே கைது செய்யப்பட்டவருடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், களவாடப்பட்ட அனைத்து வெடி பொருட்களும் கண்டி, பேராதனை பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த நபர்களில் 3 பேர் பேராதெனியைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றைய நபர் பிலிமத்தாலவவையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் நால்வர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்த அவர், சந்தேகநபர்களை மாவனல்லை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களின் விபரம் வருமாறு
துஷான் பின்னகொல்ல (49)
சுகத் வீரசிங்க (36)
சுகத் கிம்ஹான (21)
சரத் பண்டார
குறித்த சந்தேகநபர்கள் மீதும், வெடி பொருள் தொடர்பான சட்டம் மற்றும் களவு தொடர்பான சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணைகள், CID பணிப்பாளர் நிஷாந்த சொய்சா மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ், பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க உள்ளிட்ட குழுவினரால் மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
No comments:
Post a Comment