இலங்கையரை அழைத்து வருவதில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை, தாம் பணம் செலுத்தி தனிமைப்படுவது கட்டாயமானதல்ல என்கிறார் அமைச்சர் நாமல் - News View

Breaking

Post Top Ad

Friday, January 8, 2021

இலங்கையரை அழைத்து வருவதில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை, தாம் பணம் செலுத்தி தனிமைப்படுவது கட்டாயமானதல்ல என்கிறார் அமைச்சர் நாமல்

வெளிநாட்டிலுள்ள இலங்கையரை அழைத்து வருவதில் எந்த மோசடியும் இடம்பெறவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். 

வெளிநாடுகளிலுள்ள இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அடுத்த வாரம் முதல் கூடுதலான விமானங்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், மேலும் கூறுகையில், வெளிநாட்டிலுள்ள இலங்கையரை அழைத்து வருவது குறித்து நாம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். பணம் செலுத்தி தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டுமென்ற கருத்து சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளது. அது கட்டாயம் கிடையாது. 

இதுவரை சுமார் 45,000 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் அழைத்து வரப்படுபவர்கள் அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்களில் இலவசமாக தனிமைப்படுத்தப்படவுள்ளனர். 

தனிமைப்படுத்தலுக்காக இலவசமாக ஹோட்டல்கள் வழங்குவதாக கூறப்பட்டது. இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட ஹோட்டல்கள் குறித்து நாமும் தேடிக்கொண்டிருக்கிறோம். 

தாம் பணம் செலுத்தி தனிமைப்படுவது என்பது கட்டாயமான ஒன்றல்ல. அது மேலதிகமான ஒன்றாகும். தனிமைப்படுத்தலுக்காக அரசாங்கம் ஐந்து சதம் கூட பணம் அறவிடுவதில்லை. விருப்பமானவர்களுக்கு பணம் செலுத்தி ஹோட்டல்களில் தனிமைப்பட முடியும்.

11 ஆம் திகதி முதல் விசேட விமானங்கள் மூலம் இலங்கையர் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவை குறித்து ஆளும் தரப்பு மேற்பார்வை செய்யும். எதிரணிக்கு தேவையானால் இது குறித்து கவனம் செலுத்த முடியும்.

குறைபாடுகளை அவர்களுக்கு சுட்டிக்காட்ட முடியும். இந்த விடயத்தின் பின்னணியில் ஏதும் மாபியா இருந்தால் அதற்கு எதிராக குரல் கொடுக்க நாம் தயங்க மாட்டோம் என்றார். 

இதன்போது குறுக்கீடு செய்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்களை ஹோட்டல்களில் தங்க வைப்பதாக கூறி பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதனை மீளப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார். 

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad