(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்பது நாட்டின் தற்போதைய பிரதான பிரச்சினையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சவால்மிக்கது. ஆகவே உடல்கள் தகனம் செய்வதை வைத்து அரசியல் இலாபம் தேடுவதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் விவகாரத்தில் முரண்பட்டுக் கொள்வது நாட்டின் தற்போதைய பிரதான பிரச்சினை கிடையாது.
இதனை பிரதான பிரச்சினையாக்கி எதிர்த்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை முதலில் எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து உயிருடன் இருப்பவர்களை பாதுகாப்பது சவாலானது. நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகள் குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பு சுகாதார தரப்பினரிடமே உள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் நிர்வகிப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது என்பதை பொதுஜன பெரமுனவின் கொள்கையாக குறிப்பிட்டுள்ளோம்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கம் அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து உரிய தீர்மானத்தை எடுக்கும். ஜனநாயக கொள்கைக்கு முரணாக செயற்படுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றார்.
No comments:
Post a Comment