உயிர் நீத்த இந்திய மீனவர்கள் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகள் - கொலையா? விபத்தா? என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் : இராதாகிருஸ்ணன் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 24, 2021

உயிர் நீத்த இந்திய மீனவர்கள் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகள் - கொலையா? விபத்தா? என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் : இராதாகிருஸ்ணன்

தமிழக மீனவர்களின் உயிரிழப்பு மிகவும் துரதிஸ்டவசமான ஒரு சம்பவமாகும். யார் பிழை செய்தாலும் அவர்களை கொலை செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது கொலையா? விபத்தா? என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்திய மீனவர்களின் உயிரிப்பு தொடர்பாக அரசாங்கம் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுத்து நடந்த சம்பவம் என்ன என்பதை இலங்கை மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் உள்ள உறவு பாதிக்கப்படும். அது இலங்கை நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே அயல் நாடுகளுடன் நல்ல உறவை பேண வேண்டும் என்ற விடயம் கேள்விக்குறியாகும். உயிர் நீத்த மீனவர்கள் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகள். எனவே அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது. 

இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படும் போதெல்லாம் இந்திய அரசாங்கமும் விசேடமாக தமிழ் நாடும் எங்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றார்கள். எனவே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு இலங்கையில் மட்டுமல்ல எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் உண்டு. 

ஏற்கனவே 13ஆவது திருத்த சட்டத்தை கையொப்பமிட வந்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியை அன்று இராணுவ சிப்பாய் தாக்கியமை தொடர்பாக இந்தியர்களில் ஒரு சிலர் இன்றும் கடும் போக்கையே கடைபிடித்து வருகின்றனர். அது தவிர இந்திய மீனவர்கள் ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல எங்களுடைய மீனவர்களும் இந்திய கடல் எல்லையில் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. 

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த விடயத்தில் இரண்டு அரசாங்கமும் புரிந்துணர்வுடன் நடந்து கொண்டு உண்மையை உலகுக்கு தெளிவுபடுத்த வேண்டும். எங்களுடைய இராணுவத்தினர் குற்றம் செய்துள்ளார்களா? அல்லது உண்மையில் நடந்தது விபத்தா? அப்படி விபத்தாக இருந்தால் ஏன் அவர்களை எங்களுடைய கடற்படை பாதுகாப்பு பிரிவினர் அவர்களை காப்பாற்றவில்லை. இப்படி பல கேள்விகள் எங்களிடம் எழுகின்றது. எனவே இவற்றுக்கு சரியான பதிலை பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா நிருபர்

No comments:

Post a Comment