தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
உரிய பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
பாடசாலை வகுப்பறையின் அளவையோ, மாணவர்களின் எண்ணிக்கையையோ குறைப்பதற்கான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பிள்ளைகளுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சின் செயலாளர் வலியுறுத்தினார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், 2017 முதல் 2021 ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
அத்துடன், வகுப்புகளின் எண்ணிக்கை அல்லது வகுப்பொன்றில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், தரம் ஒன்று முதல் தரம் 13 வரையிலான ஆடவர், மகளிர், கலவன் பாடசாலைகளிலும், தரம் 6 முதல் தரம் 13 வரையிலான ஆடவர், மகளிர், கலவன் பாடசாலைகளிலும் அவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த எதிர்பார்க்கவில்லை எனவும் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும். மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment