இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்க முன்னெடுத்துள்ள முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்படும் - நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியமை தேசதுரோக செயல் : அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்க முன்னெடுத்துள்ள முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்படும் - நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியமை தேசதுரோக செயல் : அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இம்முறை இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் முன்னெடுத்துள்ள முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்படும். உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச அரங்கில் முயற்சிப்பது பயனற்றது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடர் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் தீர்மானம்மிக்கது. கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், சர்வதேச நாடுகள் ஆகியவை ஒன்றினைந்து பல பிரேரனைகளை கொண்டுவரப்பட்டன.

இவற்றில் 30|1 பிரேரணையை பிரதானமாக கருத வேண்டும். இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியமை தேசதுரோக செயலாகும்.

இறுதிக்கட்ட யுத்தததில் மனித உரிமை மீறள்கள் இடம்பெற்றதாக சர்வதேச அரங்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை நல்லாட்சி அரசாங்கம் நியாயப்படுத்தியது.

இராணுவத்தினரை தண்டிக்கும் செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்தது. அரசியல் நோக்கங்களுக்காகவும், புலம்பெயர் அமைப்புக்களை திருப்திப்படுத்துவதற்காகவும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

சர்வதேச அரங்கில் இலங்கையை பாதுகாக்க நல்லாட்சி அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை 2015 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கவில்லை.

அரச சார்பற்ற நிறுவனமாக செயற்பட்டு இலங்கையினை பாதுகாக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்தோம். 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணியாக இருந்தது.

இம்முறை மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்க புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும், முன்னெடுத்துள்ள திட்டங்கள் தோற்கடிக்கப்படும்.

இதுவரையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. உள்ளக பிரச்சினைக்கு சர்வதேச அரங்கில் தீர்வு காண்பது சாத்தியமற்ற செயற்பாடாகும்.

சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிராக செயற்படுபவர்கள் தமிழ் மக்களின் முன்னேற்றம் குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை இலங்கையை குறறஞ்சாட்டி ஒரு தரப்பினர் சர்வதேசத்தில் தஞ்சமடைந்துள்ளார்கள். இது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். 

சுயநல தேவைக்கான ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் பயன்படுத்திக் கொள்வது முறையற்ற செயற்பாடாகும். தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் தமிழ் அரசியல் கட்சிகள் யுத்த காலத்தில் தமிழ் மக்களை பாதுகாக்கவில்லை.

இவர்கள் கொழும்பில் சுகபோக வாழ்க்கையினை அக்காலத்தில் வாழ்ந்தார்கள். 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படவில்லை.

பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் தேவை அரசாங்கத்திற்கு இருந்தது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் வழங்கப்பட்டது. உலகில் வேறெந்த நாடுகளும் இவ்வாறு செயற்படவில்லை.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி செய்ய்பட்டன. தமிழ் மக்களுக்கு மாகாண சபை தேர்தல் ஊடாக அரசியல் உரிமை வழங்கப்பட்டது. தமிழ் மக்களின் உரிமைகளை பறிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad