தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கினால் முன்னாள் போராளிகள் சிறைச்சாலையில் வாடுகின்றனர் - இனிய பாரதி - News View

About Us

About Us

Breaking

Monday, January 25, 2021

தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கினால் முன்னாள் போராளிகள் சிறைச்சாலையில் வாடுகின்றனர் - இனிய பாரதி

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கினால் முன்னாள் போராளிகள் தற்போது சிறைச்சாலையில் வாடுவதாகவும் எனவே இந்த ஐக்கிய நாடுகள் சபையில் இறந்தவர்களை தேடிச் செல்வதை விட உயிருடன் வாழ்பவர்களின் எதிர்காலத்திற்காக தீர்வினை பெற்றுக் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும்,  கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்தார்.

அம்பாறை ஊடக அமையத்தில் இன்று (25) இரவு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது செத்தவர்களை விட்டுவிட்டு இருப்பவர்களை பற்றி பேச வேண்டும். குற்றங்கள் நடந்து முடிந்தவை உண்மைதான். இதை வைத்துதான் அரசியல் நடத்துகின்றார்கள் என்பதும் மக்களுக்கும் தெரிந்த விடயம் ஆகும். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகளை பற்றித்தான் பேச வேண்டும் என நினைக்கின்றேன். நானும் திட்டமிடப்பட்ட பழிவாங்கல் காரணமாக சிறைக்கு சென்றிருந்தேன். இது மாத்திரமன்றி பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளை தொடுத்திருந்தார்கள்.

இதனால் பல்வேறு சிறைகளுக்கு சென்று வந்திருந்தேன். இதனால் முன்னாள் போராளிகளை சந்தித்துள்ளேன். பலர் சிறைத் தண்டனை அனுபவித்தாலும் சிலருக்கு எதுவித வழக்கு தொடுக்காமல் வீணாக சிறையில் வாடுகின்றனர். அவர்கள் மிகவும் மோசமான கஸ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான தீர்வு என்ன? இறந்தவர்களை பற்றி பேசிகின்ற போது உயிருடன் உள்ளவர்களை பற்றி யார் பேசுவது? எந்த சபையில் பேசுவது என்பது எனது கேள்வியாகும். கடந்த காலங்களில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருக்கின்ற போது பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ இருந்தார். அவர் அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஒரு கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தார்.

அதாவது முன்னாள் போராளிகள் அனைவரையும் விடுதலை செய்கின்றேன் எனவும் தன்னுடன் இணைந்து பயணிக்குமாறு கேட்டிருந்தார். அன்று அவ்வாறு இணைந்து சென்றிருந்தால் தற்போது சிரமங்களை சிறைச்சாலையில் எதிர்நோக்கும் முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பர். எனவே இந்த ஐ.நா சபையில் இறந்தவர்களை தேடிச் செல்வதை விட உயிருடன் வாழ்பவர்களின் எதிர்காலத்திற்காக தீர்வினை பெற்றுக் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும்.

இதேவேளை பிள்ளையான் அவர்களின் விடுதலை என்பது முன்னாள் போராளிகளின் விடுதலைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பில்கூட சட்டத்தரணிகள் இருந்தும் விடுதலை கிடைத்தமை வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் விடுதலை அடைந்த வேளை தேவையற்ற புனைக்கதைகளை சிலர் கட்டவிழ்த்து விட்டனர் என்றார்.

No comments:

Post a Comment