இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமை மீறல் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தார் மன்னார் பிரதேச சபை தலைவர் - News View

Breaking

Post Top Ad

Friday, January 22, 2021

இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமை மீறல் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தார் மன்னார் பிரதேச சபை தலைவர்

இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமை மீறல் தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் தலைவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் மாவட்ட பிராந்திய அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், “நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னாரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கல்வி, தொழில், வதிவிடம் போன்ற தேவைகளின் நிமித்தம் தற்போதும் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றார்கள்.

இருப்பினும் இவர்களது அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் சொந்த இடமான மன்னார் மாவட்டத்தில் மீளக் குடியேறத் தயாராக உள்ளனர்.

1981ஆம் ஆண்டு 44ஆம் இலக்க தேருநர்கள் பதிவுச் சட்டத்தில் 12 (7) ஆம் உப பிரிவுக்கு இணங்க குறித்த ஒரு வாக்காளர் ஒன்றிற்கு மேற்பட்ட சாதாரண வதிவிடங்களைக் கொண்டிருந்தால் அவரது வாக்கினைப் பதிவு செய்வதற்கான தகைமை வாய்ந்த முகவரி எதுவெனத் தீர்மானிக்கும் உரிமை குறித்த வாக்காளருக்கே உரியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு, இரு இடங்களிலும் ஒருவர் விண்ணப்பித்திருந்தால் எந்த இடத்தைத் தெரிவுசெய்யப்போகிறீர்கள் என்று வாக்காளரிடம் கேட்டு ஒரு முகவரியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறித்த தேருநர் பதிவுச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிராம அலுவலகர், மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரினால் இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிக்கும் உரிமையானது நிரந்தர வதிவிட மாவட்டமான மன்னார் மாவட்டத்திலும் இடம்பெயர்ந்து வாழும் மாவட்டங்களிலும் இல்லாமல் மறுக்கப்பட்டுள்ளது.

இதனால், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற ரீதியில் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள்.

இவ்விடயம் அவர்களின் வாக்களிக்கும் உரிமையினைப் பாதிக்கும் ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாக அமைவதுடன் மனித உரிமை மீறலாகவும் அமைந்துள்ளது.

எனவே, இவ்வாறு வலுக்கட்டாயமாக அவர்களின் விருப்பத்திற்கு முரணாக தமது வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தாம் பூர்வீகமாக வாழ்ந்த மாவட்டத்தில் தமது வாக்களிக்கும் உரிமையினைப் பெற்றுக் கொள்வதற்கு அவர்களின் நிரந்தர வதிவிட மாவட்டமான மன்னார் மாவட்டத்தின் வாக்காளர் பட்டியலுடன் சேர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக அரசாங்கத்துடனும், தேர்தல்கள் ஆணையாளருடனும் கதைத்து பாதிக்கப்பட்ட மக்களின் வாக்களிக்கும் உரிமையை மீட்டுத்தருவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad