ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தமிழ் அரசியல் கைதிகளை கொரோனா வைரஸ் அபாயத்திற்குள் தள்ளிப் பலியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளும் அவசர மகஜர் ஒன்று அரசாங்கத்திற்கும், அமைச்சர்களுக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் கையளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இது விடயமாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளருக்கூடாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சுகாதார அமைச்சருக்கும் சிறைச்சாலை முகாமைத்துவ கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குவிற்கும் அனுப்புவதற்காக மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் கையளிக்கப்பட்டுள்ள அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இலங்கையின் பல்வேறு சிறைகளிலும் பல்லாண்டு காலமாக சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களில் சிலர் தமது வாழ்வை இரும்புக் கம்பிகளின் பின்னாலேயே பல ஆண்டுகளாகக் கழித்து மூப்படைந்துள்ளதோடு உடல் இயலாமைக்கும் உள்ளாகியுள்ளனர்.
தற்போது 147 தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் உள்ளனர். இவர்களுள் 69 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 61 பேருக்கு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இவர்களில் 7 பேர் பெண்களாவர். ஒரு பெண் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் உள்ளார்.
சந்தேகத்தின் பேரில் பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் அண்மையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் யாரும் இன்னும் நீதிமன்றத்தின் முன் ஆஜராக்கப்படவில்லை.
இவர்களில் பதின்ம வயதினரும் அடங்குவர். சிறைச்சாலைகளில் தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவுவதன் காரணமாக தமிழ் அரசியல் கைதிகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நாட்டின் வடக்கு கிழக்கு வாழ் சமூகத்தினரான நாம் பெரிதும் வருந்துகிறோம்.
14 வரையிலான தமிழ் அரசியல் கைதிகள் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இலங்கை அரசு 6000 சிறைக் கைதிகளை விடுவித்திருப்பதையும் தகுதியான இன்னும் பல கைதிகளை படிப்படியாக விடுவிக்கத் தீர்மானித்திருக்கும் அரச ஏற்பாட்டையும் நாம் வரவேற்கிறோம்.
ஜனாதிபதியான தாங்களும் இலங்கை அரசாங்கமும் தமிழ் அரசியல் கைதிகள் மீது கரிசனை கொண்டு அவர்களை விடுவிப்பதன் மூலம் சிறைகளில் பரவி வரும் பெருந்தொற்றிலிருந்து அவர்களின் உயிரைப் பாதுகாக்குமாறு கோருகின்றோம்
தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களைச் சிறையில் கழித்திருப்பதோடு பல்லாண்டுகளாக வெளியுகைக் காணாது இருக்கிறார்கள். அவர்களின் உடல் உள ஆரோக்கியம் ஏற்கெனேவே வீழ்ச்சியுற்றுள்ளது.
எஸ். மகேந்திரன் எனும் தமிழ் அரசியல் கைதி 1993இல் தனது பதினேழாவது வயதில் கைது செய்யப்பட்டார். இவர் 26 வருடங்களைச் சிறையில் கழித்துள்ள நிலையில் கடுஞ் சுகயீனம் காரணமாக தனது 45வது வயதில் இவ்வருடம் 2021 தை மாதம் 01 ஆம் திகதி மரணமடைந்தார்.
30 ஆண்டுகளுக்கும் மேலான யுத்தம் மற்றும் வன்முறைகளுக்கு உள்ளான வடக்கு கிழக்கு தமிழ் சமூகம் அரசாங்கங்களிடம் நல்லிணக்கத்தற்கான சாதமான சமிக்ஞைகளை எதிர்பார்க்கின்றது.
அரசியல் பொது மன்னிப்பு என்பது நல்லிணக்கசத்தின் நுளைவாயிலாகும்
அவ்வகையில் அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்று விடுவிக்குமாறு தங்களிடம் பகிரங்கமாகக் கோருகின்றோம்.
No comments:
Post a Comment