(நா.தனுஜா)
உக்ரைனிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் ஒரு பிரிவினர் மிரிஸ்ஸ மற்றும் யாலவிற்குச் சென்றமை தொடர்பான விபரங்கள் எமக்கு முன்கூட்டியே வழங்கப்படவில்லை. ஊடகங்களில் வெளியான செய்திகளின் ஊடாகவே அதனை அறிந்துகொண்டோம் என இலங்கை சுற்றுலா சபை அறிவித்திருக்கிறது.
இது குறித்து விளக்கமளிக்கும் வகையில் இலங்கை சுற்றுலா சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோவினால் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது உக்ரைனிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் ஒரு பிரிவினர் மிரிஸ்ஸ மற்றும் யாலவிற்குச் சென்றமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் ஊடாவே நாங்கள் அறிந்து கொண்டோம்.
சுற்றுலாப் பயணத்தை ஏற்பாடு செய்வோருக்கும் கொவிட்-19 தொடர்பான விசேட செயலணிக்கும் இடையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படும் இடங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே இலங்கை சுற்றுலா சபைக்கு வழங்க வேண்டும் என்ற யோசனைக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அதுமாத்திரமன்றி அவசியமேற்படும் பட்சத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இதில் தொடர்புபடும் சாரதிகள் மற்றும் சுற்றுலாப் பயண வழிகாட்டிகளின் விபரங்களையும் அந்தந்த பிராந்திய சுகாதார அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுற்றுலாப் பயண முகவர்களிடம் இருந்து மேற்படி விபரங்களைப் பெறுவதற்கு முயற்சித்த போதிலும், அது பயனளிக்கவில்லை.
சுற்றுலாப் பயணிகளை மிரிஸ்ஸவிற்கு அழைத்துச் செல்வதற்கு தனியார் படகுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் பயணிகளை யாலவிற்கு அழைத்துச் செல்ல 28 சஃபாரி ஜீப் வண்டிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் நாம் கேள்வியுற்றோம்.
எனினும் இது தொடர்பில் உரிய பயண முகவர்களிடம் இருந்தோ, ஒழுங்கமைப்பாளர்களிடம் இருந்தோ இதுவரையில் எவ்வித தகவல்களும் எமக்குக் கிடைக்கப் பெறவில்லை. ஆகவே இவ்விடயத்தில் நீங்கள் உடனடியாகத் தலையீடு செய்ய வேண்டியது அவசியமாகும்.
சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் இடங்கள் மற்றும் அது குறித்த விபரங்களை முன்கூட்டியே எமக்கு அறியத்தருவதன் ஊடாகவே நாம் சுகாதார அமைச்சிற்கும் கொவிட்-19 தொடர்பான விசேட செயலணிக்கும் அவசியமான தகவல்களை வழங்கமுடியும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment