தொற்று நோயியல் பிரிவு என்னதான் கூறினாலும் கொரோனா சமூகப் பரவலாகி நாடு ஆபத்தான கட்டத்தை நோக்கிச் செல்கின்றது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

தொற்று நோயியல் பிரிவு என்னதான் கூறினாலும் கொரோனா சமூகப் பரவலாகி நாடு ஆபத்தான கட்டத்தை நோக்கிச் செல்கின்றது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி எமது நாடு கொவிட்-19 தொற்றாளர் வீதத்தில் அபாயக்கட்டத்தை எட்டியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

கொவிட்-19 வீதமானது 5.5 விளிம்பு நிலை வீதத்தைக் கடந்து விட்டதாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹரித அளுத்கே கூறினார்.

இந்த நேர்மறை வீதமானது ஒரு மாதத்துக்கு முன் 3.0 மட்டத்தில் இருந்தது. பின்பு 4ஆம் மட்டத்துக்கு அதிகரித்தது. இப்போது 5ஆம் மட்டத்தைக் கடந்து 5.5 அளவில் உள்ளது. இது அதிக அபாயமான நிலையாகும் என அவர் கூறினார்.

எவ்வாறாயினும் வைரஸ் இன்னும் சமூகத்திலிருந்து வெளியாகவில்லை என்றும் குணமடைந்த அனைத்து நோயாளர்களும் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடையோராவர் என்றும் தொற்று நோயியல் பிரிவு கூறுகிறது.

ஆனால் அண்மைய தொற்றுக்கள் மேற்படி இரு கொத்தணிகளுடனும் தொடர்பற்றவை என்றும் அவர் கூறினார்.

துரதிர்ஷ்டவசமாக மேல் மாகாணத்திலிருந்து பிற மாகாணங்களுக்கு வைரஸ் பரவலைத் தடுக்க நாடு தவறி விட்டது. எனவே இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகமான உப கொத்தணிகள் உருவாகத் தொடங்கியுள்ளன என்றார்.

அண்மையில் நாட்டின் பிற மாகாணங்களில் குறிப்பாக தெற்கு, மத்திய மாகாணங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையில் 100 க்கு மேலான தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று நோயியல் பிரிவு என்னதான் கூறினாலும் கொவிட்-19 வைரஸ் சமூகப் பரவலாகியுள்ளதுடன் அது அடிமட்ட ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் இதனால் நாடு ஆபத்தான கட்டத்தை நோக்கிச் செல்கின்றது எனவும் மருத்துவர் ஹரித அளுத்கே கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad