அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதவிக் காலம் முடிந்துவிட்டது - அரசின் இணையத்தள பக்கத்தில் வெளியான பதிவால் பரபரப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதவிக் காலம் முடிந்துவிட்டது - அரசின் இணையத்தள பக்கத்தில் வெளியான பதிவால் பரபரப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் முடிந்துவிட்டது என அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பதிவு சிறிது நேரத்தில் நீக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். அந்த வெற்றியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு பாராளுமன்றமான கேப்பிடல் கட்டிடத்தில் கடந்த 7ம் திகதி நடைபெற்றது.

அப்போது அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வழிமுறைகளை கையாண்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் போலீஸ் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்க வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக ஜனாதிபதி டிரம்பின் டுவிட்டர், பேஸ்புக் வலைத்தள பக்கங்கள் முடக்கப்பட்டன.

இதற்கிடையில், அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உள்ளிட்டோரின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும். தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதவி மற்றும் அவரது விவகரங்கள் தொடர்பான விவரங்கள் உள்ளது.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்பின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டதாக அமெரிக்க அரசு இணையத்தள பக்கத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசின் இணையத்தள பக்கத்தில் டொனால்ட் டிரம்பின் பதவிகாலம் 11.1.2021 (நேற்று) இரவு 7 மணி 40 நிமிடம் 41 நொடியுடன் முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சில நிமிடங்கள் கழித்து அந்த பதிவு நீக்கப்பட்டது. 

ஜனாதிபதி டிரம்பின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது என அரசு இணையத்தள பக்கத்தில் வெளியான பதிவு குறித்து அமெரிக்க அரசு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

அரசு இணையத்தள பக்கத்தில் டிரம்பின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது என வெளியான பதிவு ஹேக்கிங் செய்யப்பட்டதா? அல்லது அதிகாரிகள் வேண்டுமென்றே அவ்வாறு பதிவு செய்தனரா? என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment