தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள சாதாரண தர மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் என்ன? - கேள்வியெழுப்பியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள சாதாரண தர மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் என்ன? - கேள்வியெழுப்பியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்

(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் கூறியிருக்கின்றார். அவ்வாறெனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள சாதாரண தர மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாது என இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

கொழும்பில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஒவ்வொரு தினங்களில் ஒவ்வொரு கருத்துக்களை கல்வி அமைச்சர் கூறிக் கொண்டிருக்கிறார். இவை அனைத்தையும் பொதுஜன பெரமுன அலுவலகத்திலிருந்தே கூறுகிறார். கல்வி தொடர்பில் கருத்து தெரிவிக்க வேண்டியது கல்வி அமைச்சிலாகும். 

இவ்வாறிருக்க இம்மாதம் 11 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளையும் ஆரம்பிக்கவுள்ளதாக ஆரம்பத்தில் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது. மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் 11 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டது. 

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் திங்களன்று மேல் மாகாணத்திலும் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலேயே இவ்வாறு சாதாரண தரத்திற்கு மாத்திரம் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இவ்வாறு அறிவிப்புக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பது மாத்திரம் போதுமானதல்ல. 

11 ஆம் திகதி சகல பாடசாலைகளையும் ஆரம்பிப்பதாக இருந்தாலும் 25 ஆம் திகதி மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பதாக இருந்தாலும் இதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் எவை என்பதையும் அறிவிக்க வேண்டும். இதுதான் எமது வேலைத்திட்டம் என்று கூறி அதற்கேற்ப தயார்படுத்தல்களை முன்னெடுக்க வேண்டும்.

கொவிட் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை ஆரம்பிப்பதாயின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். மாணவர்களை அச்சமின்றி பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கான சூழலை பெற்றோருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். மாணவர்களின் போக்குவரத்து தொடர்பிலும் முறையான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் கூறியிருக்கின்றார். அவ்வாறெனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள சாதாரண தர மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாது? மார்ச் மாதம் இடம்பெறவுள்ள சாதாரணதர பரீட்சைக்கு மேல் மாகாணத்தில் முடக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மாணவர்களும் தோற்றவுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment