இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது - எமது ஆட்சியில் வழங்கிய மாகாண சபைத் தேர்தல் உரிமையைக்கூட நல்லாட்சி பாதுகாக்கவில்லை : திலும் அமுனுகம - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது - எமது ஆட்சியில் வழங்கிய மாகாண சபைத் தேர்தல் உரிமையைக்கூட நல்லாட்சி பாதுகாக்கவில்லை : திலும் அமுனுகம

(இராஜதுரை ஹஷான்)

இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அனைத்து இன மக்களின் உரிமைகளுக்கும் மதிப்பளித்து அரசாங்கம் செயற்படும் என போக்கு வரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்ககள். இடம்பெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றியமை அரசியல் வரலாற்றில் எவரும் எதிர்பார்க்காத விடயமாகும். சுபீட்சமான எதிர்கால கொள்கைத் திட்டத்தை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் புறக்கணித்து செயற்படுவதாக குறிப்பிட்டு எதிர்த்தரப்பினர் பெரும்பான்மை சமூகத்துக்கும் சிறுபாண்மை சமூகத்துக்குமிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க தமிழ் பேசும் மக்கள் அதிக பங்களிப்பு செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப் பெறவில்லை பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன பிரதானமாக மாகாண சபைத் தேர்தலை குறிப்பிட வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனைய மாகாணங்களை காட்டிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு மாகாண சபைத் தேர்தல் அவசியமாக இருந்தது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து மாகாண சபைத் தேர்தலை நடத்தினார். தமிழ் மொழி பேசும் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தெரிவு செய்து கொண்டார்கள்.

எமது ஆட்சியில் வழங்கிய மாகாண சபைத் தேர்தல் உரிமையைக்கூட நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கவில்லை. அரசியல் காரணிகளுக்காக மாகாண சபை முறைமை பிற்போடப்பட்டது. 

மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக தேர்தல் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது. வெகுவிரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.

அனைத்து இன மக்களும் பொருளாதார மட்டத்தில் முன்னேற்றமடைந்தால் சமூகத்தின் மத்தியில் வீண் முரண்பாடுகள் தோற்றம் பெறாது. சுபீட்சமான எதிர்கால கொள்கைத் திட்டத்தில் நாட்டு மக்களின் முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆகவே இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அனைத்து இன மக்களின் உரிமைகளுக்கும் மதிப்பளித்து அரசாங்கம் செயற்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad