திட்டமிட்டு அழிக்கப்படும், தொல் பொருள் சிறப்பு வாய்ந்த இடங்களை பாதுகாக்க உரிய பாதுகாப்பு பொறிமுறை - அமைச்சர் விதுர விக்ரமநாயக்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 13, 2021

திட்டமிட்டு அழிக்கப்படும், தொல் பொருள் சிறப்பு வாய்ந்த இடங்களை பாதுகாக்க உரிய பாதுகாப்பு பொறிமுறை - அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

(இராஜதுரை ஹஷான்)

புராதன தொல் பொருள் மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. நாடு தழுவிய ரீதியில் உள்ள தொல் பொருள் சிறப்பு வாய்ந்த இடங்களை பாதுகாக்க உரிய பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது என தேசிய மரபுரிமைகள், கிராமிய கலை கலாச்சார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் பாரம்பரிய தொல்பொருள் மரபுரிமைகள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள், கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலாச்சார அம்சங்கள் அனைத்தும் ஒரு தலைமுறையின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை இன்று எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. 

பல்லாயிரம் கணக்கான வருடங்களை கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க தொல் பொருட்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் மாத்திரமல்ல நாட்டு மக்களினதும் பொறுப்பாகும். தொல் பொருள் மரபுரிமை சின்னங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் திட்டமிடப்பட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. 

ஒரு தரப்பினர் தங்களின் சுய தேவைகளுக்காகவும் வரலாற்று சின்னங்களை அழித்துள்ளார்கள். வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல முழு நாட்டிலும் தொல் பொருள் சிறப்பு வாய்ந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொல் பொருள் சிறப்பு வாய்ந்த இடங்களில் சட்ட விரோத குடியிருப்புக்கள் அமைக்கபபட்டுள்ளன. சட்ட விரோத குடியிருப்புக்களை அகற்றும்போது தேவையற்ற பிரச்சினைகள் தோற்றம் பெறும் இருப்பினும் வரலாற்று மரபுரிமைகளை பாதுகாப்பதும் கட்டாயமாகும். ஆகவே இப்பிரச்சினைகளுக்கு முரணற்ற தீர்வு காண்பது அவசியமாகும்.

தொல் பொருள் மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு விசேட பாதுகாப்பு பொறிமுறை செயற்படுத்தப்படும். இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிராமிய கலை கலாச்சாரங்களை மேம்படுத்தும் திட்டங்களை பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் அரசியல் கருத்துக்கள், நோக்கங்கள் வேறுப்பட்டதாக இருக்கலாம் ஆனால் நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.தொல்பொருள் சிறப்புமிக்க இடங்கள் நாட்டின் வரலாற்று அடையாளம் அதைனை பாதுகாப்பது அனைத்து இன மக்களினதும் பொறுப்பாகும் என்றார்.

No comments:

Post a Comment