முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மையான வடிவமே அமெரிக்க மோதல் என்கிறார் அமைச்சர் வாசு - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மையான வடிவமே அமெரிக்க மோதல் என்கிறார் அமைச்சர் வாசு

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய அமெரிக்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற ஜனநாயக விரோத போராட்டம் மிகவும் அருவருக்கத்தக்க விடயமாகும். டொனால் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், அதனை ஏற்றுக் கொள்ளாமல் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி, மக்களை மோதல் நிலைக்கு தூண்டிவிடுவது, அந்த நாட்டின் நீண்ட கால ஜனநாயக நற்பெயருக்கு மேற்கொள்ளப்பட்ட பாரியதொரு தாக்குதலாகும் என அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் ஆதரவாளர் கெபிடல் கட்டடத்துக்குள் புகுந்து மேற்கொண்ட போராட்டம் தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தீர்மானமிக்க மோதல் இடம்பெறும்போது முதலாளித்துவ தலைவர்கள் ஜனநாயகத்தை புறந்தள்ளிவிட்டு, அதிகாரத்தை செயற்படுத்துவதை தனது கையில் எடுத்துக் கொள்ளும் முயற்சியாகவே அமெரிக்காவில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் மூலம் தெளிவாகின்றது. இது இரண்டு முதலாளித்துவ தலைவர்களுக்கிடையிலான மோதலாகும்.

அத்துடன் உண்மையில் முதலாலித்துவ விரோத சக்தி ஒன்று வெற்றி பெற்றிருந்தால், பேர்னி சென்டர்ஸ் போன்ற ஒருவர் இன்று ஜோ பைடன் போன்று வெற்றி பெற்றிருந்தால், அந்த நாட்டின் அரச இயந்திரமும், அவர்களுக்கு வழிநடத்த முடியுமான அனைத்து சக்திகளையும் இணைத்துக் கொண்டு, அந்த வெற்றியை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும்.

அதேபோன்று தற்போது இருந்துவரும் அரச அதிகாரத்தை அவ்வாறே பாதுகாத்துக் கொள்ளவும் எந்தவொரு வன்முறைக்கும் அவர்கள் தயார் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

எனவே இந்த சம்பவமானது அனைத்து நாடுகளுக்கும் ஒரு பாடமாகும். அனைத்து நாடுகளிலும் மக்களின் சக்திக்கு அதிகாரத்தை, மக்களினால் ஏற்படுத்தப்பட்டால், அதனை இல்லாமலாக்க அதிகார சக்தியினால் பல்வேறு சதித்திட்டங்களை மேற்கொள்வதை நாங்கள் எதிர்பார்க்க வேண்டும். இதுதான் பாடமாகும்.

மேலும் அமெரிக்காவில் அவர்களுடைய அதிகார வர்க்கம் இரண்டு பிரிவினருக்கிடையில் இடம்பெற்ற பிளவினால் இந்தளவு தூரத்துக்கு இந்த வன்முறை சென்றிருந்தால், அந்த நாட்டு மக்களுக்கு உண்மையான தலைவர் தெரிவாகி இருக்கும் நிலையில் உள்நாட்டு யுத்தம் ஒன்றை தவிர வேறு ஒன்றும் ஏற்படப்போவதில்லை என்பது மிகவும் தெளிவாகும். அதுதான் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மையான வடிவமாகும் என்றார்.

No comments:

Post a Comment