ஜெனிவா புதிய பிரேரணை : கூட்டமைப்பு, கூட்டணி, முன்னணி தரப்புக்களிடையே இன்று முக்கிய சந்திப்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, January 2, 2021

ஜெனிவா புதிய பிரேரணை : கூட்டமைப்பு, கூட்டணி, முன்னணி தரப்புக்களிடையே இன்று முக்கிய சந்திப்பு

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தி புதிய பிரேரணையொன்று பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவுள்ளமை ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் புதிய பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளிடையே இணக்கம் காணப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன.

அந்த முயற்சிகளின் பலனாக கடந்த 29ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்றிருந்த தமிழர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையிலான கூட்டத்தில் பிரேரணைக்கான முன்மொழிவுகளை கூட்டிணைந்து தயாரிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருக்காத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இணைத்துச் செல்வதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் பிற்பகல் 2 மணிக்கு குறித்த குழுவானது கூடவுள்ளது. 

குழுவின் ஏற்பாட்டாளராக வி.எஸ்.சிவகரன் செயற்படும் அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் அல்லது அவர் சார்பிலானவர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், இவர்களுக்கு மேலதிகமாக, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் உள்ளிட்டவர்களும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad