வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பிரயாணிகள் தனிமைப்படுத்தப்படுவதில்லை, பாரிய கொத்தணிகள் உருவாகக் கூடும் என எச்சரிக்கிறார் விசேட வைத்தியர் சுதத் சமரவீர - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பிரயாணிகள் தனிமைப்படுத்தப்படுவதில்லை, பாரிய கொத்தணிகள் உருவாகக் கூடும் என எச்சரிக்கிறார் விசேட வைத்தியர் சுதத் சமரவீர

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பிரயாணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதில்லை. எனவே அவர்கள் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும். அவ்வாறில்லை என்றால் வெளிநாட்டவர்களால் உள்நாட்டவர்கள் தொற்றுக்கு உள்ளானால் பாரிய கொத்தணிகள் உருவாகக் கூடும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பிரயாணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் நிறையில் சுற்றுலா செல்லும் முறைமை பின்பற்றப்படவில்லை. அவ்வாறு செய்வது சாத்தியமற்றது. காரணம் தனிமைப்படுத்தல் காலத்தில்தான் அவர்கள் சுற்றுலா செல்கின்றனர். 

எனவே சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும். காரணம் சுற்றுலாத் துறையினர் மூலம் உள்நாட்டிலுள்ளோர் ஏதேனுமொரு வகையில் தொற்றுக்கு உள்ளானால் அதனால் பாரிய கொத்தணிகள் உருவாகக் கூடிய வாய்ப்புள்ளது. அத்தோடு இந்த வைரஸின் வௌ்வேறு வகைகள் நாட்டில் உருவாகக் கூடிய வாய்ப்பும் இதன் மூலம் ஏற்படும்.

எனவே சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய ஹோட்டல் ஊழியர்கள், வாகன சாரதிகள் உள்ளிட்டோர் குறித்த காலப்பகுதிகளில் அவரவர் தொழில் புரியும் இடங்களில் மாத்திரமே இருக்க வேண்டும்.

முதலாம் கட்ட சுற்றுலா பயணிகள் நாட்டிலிருந்து சென்றதன் பின்னர் குறித்த சேவையாளர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும். அதன் பின்னரே அவர்கள் சமூகத்துடன் இணைய முடியும். நாட்டில் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிதளவு வீழ்ச்சி காணப்பட்டாலும் நாளாந்தம் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

கொழும்பு மாநகர சபையை அண்மித்த பகுதிகள் மற்றும் மேல் மாகாணத்தில் ஆரம்பத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போதிலும் தற்போது ஏனைய மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள். இதன் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில மக்கள் கூட்டத்திற்கு எழுமாறாக அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை என்பன முன்னெடுக்கப்படுகின்றன.

அத்தோடு வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைகளுக்கு வருபவர்களுக்கு ஏதேனும் தொற்று அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களுக்கும் பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தொற்றாளர்கள் குறைவாக இனங்காணப்படும் பகுதிகளில் தொற்றுக்குள்ளான அனைவரையும் இனங்கண்டு அந்த பகுதியை முழுமையாக கொரோனா அற்ற பகுதியாக மாற்ற முடியும் என்றார்.

No comments:

Post a Comment