ஜனாஸா எரிப்புக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது கல்முனை மேல் நீதிமன்றம் - News View

Breaking

Post Top Ad

Thursday, January 7, 2021

ஜனாஸா எரிப்புக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது கல்முனை மேல் நீதிமன்றம்

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு இருக்கின்ற ஜனாஸாவை எரியூட்டுகின்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துகின்ற வகையில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றினால் இங்கு இறந்தவராக சொல்லப்படுகின்ற சம்மாந்துறையைச் சேர்ந்த நபரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இவரின் மகன் வழக்கு தாக்கல் செய்து மரண விசாரணையை மீண்டும் நடத்த கோரி உள்ளார்.

இவர் இம்மனுவில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு உள்ளார். இம்மனு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் நேற்று (6) அழைக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை செவிமடுத்த நீதிபதி மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். அத்துடன் பிரதிவாதிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆஜராக வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார்.

மனுதாரரை ஆதரித்து சட்டத்தரணிகளான முஹைமீன் காலித், மனார்தீன், றதீப் அகமட், ஹஸ்ஸான் றுஷ்தி, முபீத் இயாஸ்டீன், றிப்கான் கரீம், மௌபீக் றசீன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

இறந்தவரின் ஜனாஸாவை எரிக்க உத்தரவிட கோரி கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் கடந்த திங்கட்கிழமை (04) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரின் ஜனாஸா தகனம் செய்யப்படுவதற்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் வழக்காளிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் கண்டறிவதற்காக மரண விசாரணையை மேற்கொள்ளுமாறு உத்தரவிடக் கோரி தமது வாதங்களை முன்வைத்தனர்.

அதேவேளை, அத்தகைய விசாரணைக்கான அவசியம் எமக்கு எழவில்லை எனவும் அந்த உடலத்தை தகனம் செய்வதற்கு அனுமதிக்குமாறும் பொலிஸாரினால் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு தரப்பினரதும் வாதப்பிரதிவாதங்களை செவிமடுத்த நீதவான், மரண விசாரணைக்கு உத்தரவிட முடியாது எனவும் அதேவேளை உடலத்தை தகனம் செய்வதற்கும் தம்மால் அனுமதி வழங்க முடியாது எனவும் தெரிவித்து, குறித்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

இந்நிலையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபரின் ஜனாஸாவை செவ்வாய்க்கிழமை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருந்ததுடன் சடலங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இராணுவத்தினரின் பாதுகாப்பிற்கு உட்பட்டுள்ளதை காண முடிந்தது.

அம்பாறை நிருபர் ஷிஹான்

No comments:

Post a Comment

Post Bottom Ad