ஜே. ஆர். போன்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம், காலகட்டங்கள் வெவ்வேறாயினும் சிறந்த திட்டமிடலே முக்கியம் : ரணில் சூளுரை..! - News View

About Us

About Us

Breaking

Friday, January 15, 2021

ஜே. ஆர். போன்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம், காலகட்டங்கள் வெவ்வேறாயினும் சிறந்த திட்டமிடலே முக்கியம் : ரணில் சூளுரை..!

(எம்.மனோசித்ரா)

கடந்த 1977 இல் ஜே.ஆர். ஆட்சியை கைப்பற்றியது போன்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியே தீருவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார்.

காலகட்டங்கள் வெவ்வேறாயினும் சிறந்த திட்டமிடலே இங்கு முக்கியமாகின்றது. எனவே வெற்றி இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் அதற்காக ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார உட்பட புதிய பதவிகளுக்கு தெரிவானவர்களை கொள்ளுப்பிட்டியிலுள்ள இல்லத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

இந்த சந்திப்பில் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அங்கு மேலும் அவர் கூறுகையில், ஐக்கிய தேசிய கட்சியில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கை தளிர்விட்டுள்ளது. கிராமத்தை பின்னணியாக கொண்ட ஒருவருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டமை சிறந்ததொரு விடயமாகும். 

1977 களில் பெரும்பான்மையுடன் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றிய ஜே.ஆர். ஜயவர்தனவின் பயணத்தையே நாம் தொடர வேண்டியுள்ளது. அன்று ஜே.ஆர். உடன் இருந்த அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்ல.

என்.ஜீ.பி. பண்டிதரட்ண, எனது தந்தை எஸ்மன்ட் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜீ.பி.சி. சமரசிங்க போன்றவர்கள் சிறந்த நிர்வாக சேவை உத்தியோகஸ்தர்கள் ஆவர். மறுபுறம் சிறில் மெத்திவ், ஆர். பிரேமதாச, போல் பெரேரா, ஈ.எல். சேனாநாயக, வின்சன்ட் பெரேரா, காமினி மற்றும் லலித் போன்றவர்களும் இருந்தனர். இவர்கள் அனைவருமே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

ஆனால் இவர்களை இணைத்துக் கொண்டுதான் 1977 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தண ஆட்சியை கைப்பற்றும் போராட்டத்தை தொடங்கினார். எனவே இவ்வாறான பயணத்தையே நாம் தொடங்க வேண்டியதுள்ளது. அன்றைய சூழலும் இன்றைய நிலைமையும் வெவ்வேறு என்றாலும் சிறந்த திட்டமிடலே எம்மை வெற்றி இலக்கை நோக்கி கொண்டு செல்லும். எனவே கட்சியின் வெற்றி இலக்கை நோக்கிய திட்டத்தை தயாரிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள். சாகல ரத்நாயக மற்றும் அனோமா கமகே ஆகியோர் இதற்கு தலைமைத்தாங்கி ஆலோசணைகள் பெற்று திட்டத்தை வரைவார்கள்.

மிக குறுகிய காலத்தில் தற்போதைய அரசாங்கம் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துள்ளது. எதிர்க்கட்சியும் அதேநிலையில்தான் உள்ளது. ஹரின் மற்றும் ரஞ்சன் ஆகியோரை ஐக்கிய தேசிய கட்சி தனிமைப்படுத்தி விடக்கூடாது. அவர்களுக்கு ஏற்படக்கூடிய அநீதிகளின் போது நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும். தேவைப்படின் நீதிமன்றத்தின் ஊடாகவும் நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment