இலங்கை கடற்படை கப்பலுடன் மோதி மூழ்கிய இந்தியப் படகிலிருந்த 4 மீனவர்களின் சடலங்கள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 21, 2021

இலங்கை கடற்படை கப்பலுடன் மோதி மூழ்கிய இந்தியப் படகிலிருந்த 4 மீனவர்களின் சடலங்கள் மீட்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போது, இலங்கை கடற்படையினரின் கைதிலிருந்து தப்பிக்க, கடற்படை படகை மோதி சேதப்படுத்தி மிக ஆபத்தான முறையில் படகை செலுத்த முற்பட்டபோது சமனிலை குலைந்து நீரில் மூழ்கியதாக கூறப்பட்ட இந்திய மீனவப் படகில் இருந்த நான்கு மீனவர்கலின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. 

நேற்று இரு சடலங்களும் இன்று இரு சடலங்களும் மீட்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார். 

அதன்படி கடற்படை முன்னெடுத்த விஷேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட இந்திய மீனவ படகை கரைக்கு எடுத்து வருவது தொடர்பிலான நடவடிக்கை மட்டும் எஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சடலமாக மீட்கப்பட்ட மீனவர்களில் இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய இரு சடலங்களும் இன்று மாலை வரை நீதிவான் பார்வையிடும் வரை காங்கேசன்துறை துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவையும் நீதிவான் பார்வையிட்டதும் யாழ். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

நெடுந்தீவில் இருந்து வடமேல் திசையில் சர்வதேச கடற்பரப்பிலிருந்து 8 கடல் மைல் தூரத்தில் (15 கிலோ மீற்றர்), கடந்த திங்கட்கிழமை (18) இரவு வேளையில் சட்ட விரோத இந்திய மீனவப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கை கடற்படையினர் நேற்று அறிவித்தனர்.

சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய படகு கடற்படையினரின் எச்சரிக்கையை மீறி தப்பிச் செல்ல, மிக ஆவேசமாக, ஆபத்தான முறையில் கடற்படை படகுடன் மோதச் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்போது சமநிலையை இழந்து நீரில் மூழ்கி விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த இந்திய மீனவ படகானது சட்டவிரோத மீன் மீடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நேரம், கடற்படையின் படகை மீறிச் செல்ல முயன்ற நிலையில், மிக ஆபத்தான படகு செலுத்தும் முறைமைகளை சட்ட விரோத மீனவர்கள் கையாண்டதாக கடற்படையினர் கூறினர்.

இதன்போதே, கடற்படையினரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் குறித்த சட்ட விரோத மீனவப் படகு, கடற்படையின் படகுடன் மோதச் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் அப்படகு சமனிலை குலைந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனதாகவும் கடற்படையினர் கூறுகின்றனர். சம்பவம் தொடர்பில் இந்திய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment