அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை உடன் பதவி விலக ஜனநாயகக் கட்சி அழுத்தம் - பாராளுமன்றத்தில் 2ஆவது நம்பிக்கையில்லா தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை உடன் பதவி விலக ஜனநாயகக் கட்சி அழுத்தம் - பாராளுமன்றத்தில் 2ஆவது நம்பிக்கையில்லா தீர்மானம்

அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத்தில் கடந்த புதனன்று இடம்பெற்ற கலவரம் தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிராக புதிய நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை ஜனநாயகக் கட்சியினர் கொண்டுவரவுள்ளனர்.

ட்ரம்ப் உடன் பதவி விலகாவிட்டால் அவரை பதவி நீக்குவதற்கான இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப் மீது ‘கிளர்ச்சியை தூண்டியதான குற்றச்சாட்டை’ இன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரவுள்ளனர்.

ஐவர் கொல்லப்பட்ட பாராளுமன்ற கட்டடத்திற்குள் இடம்பெற்ற கலவரத்தை ட்ரம்ப் தூண்டிவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தின் முடிவு என்று குறிப்பிட்டிருக்கும் பதவி ஏற்கவுள்ள ஜனாதிபதி ஜோ பைடன், ட்ரம்ப் தனது பதவியை வகிப்பதற்கு நீண்ட காலமாக தகுதியற்று இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்திருக்கும் வெள்ளை மாளிகை அது அரசியல் நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளது. இது நாட்டை மேலும் பிளவுபடுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு பிரதிநிதிகள் சபையின் சுமார் 160 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டால் டிரம்புக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் இரண்டாவது முறையாக அமையும்.

கடந்த 2019 ஜனவரியில் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் ட்ரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. எனினும் செனட் சபையில் அது நிராகரிக்கப்பட்டது.

அமெரிக்க வரலாற்றில் எந்த ஜனாதிபதி மீதும் இரு தடவைகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதில்லை.

எனினும் செனட் சபையில் டிரம்புக்கு குடியரசு கட்சியினரிடம் பரந்த அளவில் ஆதரவு இருப்பதால் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

குடியரசுக் கட்சியின் மிதவாத செனட்டர்களில் ஒருவரான அலஸ்காவின், லிசா முர்கோஸ், ட்ரம்ப் வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். 

அதேபோன்று ட்ரம்ப் மீது விமர்சனங்களை தொடுத்து வந்த குடியரசுக் கட்டிசியின் நெப்ரஸ்கா செனட்டர் பென் செசே, இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிச்சம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது என்று தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதியின் கட்சியைச் சேர்ந்த போதுமான உறுப்பினர்கள் அவர் மீது குற்றம் சாட்டுவதற்கு இணக்கத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் டிரம்புக்கு எதிரான ஓர் அடையாள நடவடிக்கையாகவே அமைய வாய்ப்பு உள்ளது.

எனினும் இதில் ட்ரம்ப் குற்றம் காணப்பட்டால் முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களை அவர் இழப்பதோடு அரச பதவிகளை வகிப்பதற்கு நிரந்தர தடைக்கு உள்ளாவார்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வரும் ஜனவரி 20 ஆம் திகதி ஜோ பைடன் பதவி ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad