22ஆம் திகதி முதல் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் விரும்பும் விமானத்தில், விரும்பும் கட்டணத்தில் வரலாம் என்கிறார் அமைச்சர் நிமல் லான்சா - News View

Breaking

Post Top Ad

Friday, January 8, 2021

22ஆம் திகதி முதல் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் விரும்பும் விமானத்தில், விரும்பும் கட்டணத்தில் வரலாம் என்கிறார் அமைச்சர் நிமல் லான்சா

ஜனவரி 22ஆம் திகதி முதல் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் விரும்பிய விமானங்கள் மூலம் இலங்கைக்கு வரக்கூடிய வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்குமென இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளிலுள்ள இலங்கையரை அழைத்து வருவதில் அரசாங்கம் அனைவரையும் இலவசமாக அழைத்து வரவே தீர்மானத்தை எடுத்திருந்தது. 

இப்போது வரையில் 70,000 பேர் வரை அழைத்து வரப்பட்டுள்ளதுடன் அவர்களில் 68,000 பேர் வரையானோர் இங்கு வந்த பின்னர் இலவசமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிலர் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு இணக்கம் வெளியிட்டனர். இதன்படியே அவர்கள் ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எங்கேனும் சில குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு மாற்றீடாகவே ஜனவரி 22 ஆம் திகதி முதல் அனைத்து விமானங்களுக்கும் இலங்கைக்கு வருவதற்கு அனுமதியளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி நாம் விரும்பும் விமானத்தில் தாம் விரும்பும் கட்டணத்தில் இலங்கைக்கு வர முடியும். இதற்கான முறைமையொன்று சுகாதார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது என்றார்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad