விமான நிலையங்கள் 21 ஆம் திகதி திறக்கப்படும் என்கிறார் அமைச்சர் பிரசன்ன - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 5, 2021

விமான நிலையங்கள் 21 ஆம் திகதி திறக்கப்படும் என்கிறார் அமைச்சர் பிரசன்ன

(செ.தேன்மொழி)

சுகாதார விதிமுறைகளுக்கமைய இம்மாதம் 21 ஆம் திகதி முதல் உத்தியோகப்பூர்வமாக விமான நிலையங்களை திறக்கவுள்ளதாக தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் வருவதற்கு அனுமதி வழங்குவதாகவும் கூறினார்.

அதற்கமைய 10 மாதங்களுக்கு பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்களை வணிக நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாகவும், இந்நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் போது விமான நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா விடுதிகள் முகாமைத்துவ நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது, சுற்றுலாத்துறை கைத்தொழிலாளர்கள் 30 இலட்சம் பேர் வரை தற்போது பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட பாதிப்பே இதற்கு பிரதான காரணமாகும். அதனால், இந்த விடயம் தொடர்பில் கவனத்திற்கொண்டு உரிய சுகாதார விதிமுறைகளுக்கமைய சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வருவதற்கு அனுமதிவழங்க நாம் தீர்மானித்துள்ளோம். இந்த முடிவு இன்று நேற்று எடுக்கப்பட்ட முடிவல்ல.

சுற்றுலாத்துறை வர்த்தகத்தை முன்னேற்றுவதற்காகவே சுற்றலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை நியமிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையைச் சேர்ந்த வர்த்தக நடவடிக்கைகள் 99 சதவீதம் தனியார் துறையின் ஒத்துழைப்புடனே இடம்பெறும். வரலாற்றில் முதல்தடவையாகத்தான் அரசாங்கம் சுற்றுலா சேவை கைத்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. இந்த கைத்தொழிலாளர்களின் மீது எமக்குள்ள பொறுப்பின் காரணமாகவே, நாம் இந்த செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தோம்.

கடந்த வருடம் ஜுன் மாதமே அதற்கான திட்டத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்தோம். எனினும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை காரணமாக இவ்வாறு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத்தில் இது தொடர்பில் சுகாதார பிரிவுடன் கலந்துரையாடி சுற்றுலா பயணிகளுக்கான சுகாதார ஒழுங்கு விதிகளை தயாரிக்க நடவடிக்கை எடுத்திருந்தோம்.

அதற்கமைய கடந்த வருடம் டிசம்பர் 26 ஆம் திகதி தொடக்கம் விசேட விமானத்தின் ஊடாக சுற்றுலா பயணிகளை அழைத்து வருமாறு நிறுவனங்களுக்கு தெரிவித்தோம். இதன்போது மூன்று நிறுவனங்கள் ரஷ்ய நாட்டு பிரஜைகளை அழைத்து வருவதற்கு இணக்கம் தெரிவித்தன. அதற்கமையவே உக்ரேன் நாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

இந்த வேலைத்திட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதியிலிருந்து வணிகரீதியாகன நடவடிக்கைகளுக்காக விமான நிலையங்களை திறக்க தீர்மானித்துள்ளோம். சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு புறம்பாக சுற்றுலா பயணிகளை அழைத்துவரும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலா பயணிகளுக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிச் செய்யப்பட்டால் மாத்திரமே அவர்கள், எம்மால் தெரிவு செய்யப்பட்டுள்ள 14 இடங்களுக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். இந்த 14 இடங்களில் தலதா மாளிகையும் உள்ளடங்குகின்றது. அதற்கமைய தலதா மாளிகையை மூடிவைப்பதற்கு நாம் ஒருபோதும் தீர்மானம் எடுக்கவில்லை.

வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் தொல்பொருளியல் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக ஒழுங்கு விதியொன்றை தயாரித்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். யாரும் இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை, உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சந்திக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை தொடர்பிலும் நாம் முயற்சி செய்து வருகின்றோம்.

விமானநிலையத்தை திறப்பதற்கு சுற்றுலா பயணிகள் அழைத்து வருவதற்கும் எதிர்தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஆளும் தரப்பில் சிலரின் இலாபத்திற்காகவே இவை திறக்கப்படவுள்ளதாகவும்,விமான நிலையத்தினதும், விமான சேவை நிறுவனங்களினதும் வரி கட்டணங்களை குறைப்பதற்கும் எமது சுயலாபத்தை கருத்திற் கொண்டே செய்துள்ளதாக அவர்கள் கூறிவருகின்றனர்.

நாம் கடந்த வருடம் பெப்ரவரி 26 ஆம் திகதி மத்தல மற்றும் ரத்மலானை சர்வதேச விமான நிலையங்களுக்கு விமோன சேவை நிறுவனங்களின் சேவையை பெற்றுக் கொள்வதற்காக அமைச்சரவையில் யோசனை ஒன்றை முன்வைத்திருந்தோம். அதன் பிரகாரமே வரி குறைப்பு தொடர்பில் முடிவெடுக்கப்பட்டது.

கொரேனா வெரஸ் பரவலடைவதற்கு முன்னர் நாம் இது தொடர்பில் முடிவெடுத்திருந்தோம். சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலாளர்கள் 30 இலட்சம் பேரும் நலனைப் பெறுவதற்கு எதிர்தரப்பினருக்கு விருப்பமில்லை. அவர்களின் வீழ்ச்சியை தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க கூடிய ஆயுதமாக பயன்படுத்தி கொள்வதே இவர்களது நோக்கம்.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைப் போன்று சுற்றுலாத்துறை கைத்தொழிலாளர்களை பழித்தீர்த்து, தங்களது அரசியல் பயணத்தை முன்னெடுப்பதே எதிர்கட்சியில் எண்ணமாக இருக்கின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad