தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியே செல்லுதல், உட்பிரவேசித்தல் தண்டனைக்குரியது - இதுவரை 2,044 பேர் கைது, 1900 பேருக்கு எதிராக வழக்கு என்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியே செல்லுதல், உட்பிரவேசித்தல் தண்டனைக்குரியது - இதுவரை 2,044 பேர் கைது, 1900 பேருக்கு எதிராக வழக்கு என்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறியதாக இதுவரையில் 2,044 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 1900 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொழும்பில் ஆறு பொலிஸ் பிரிவுகளும், அவிசாவளை, ருவன்வெல்ல மற்றும் காத்தான்குடி ஆகிய பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை நாடளாவிய ரீதியில் அண்ணளவாக 60 கிராம சேவகர் பிரிவுகளும், வீதி ஒழுங்கைகளும், சில தொடர்மாடி குடியிருப்புகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில், அத்தியாவசிய தேவையின்றி அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வேறு பிரதேசங்களுக்கு செல்வதோ, வெளிப் பிரதேசங்களில் இருப்பவர்கள் அந்த பிரதேசங்களுக்கு வருகை தரவோ அனுமதி வழங்கப்பட மாட்டாது. அவ்வாறு எவரேனும் சென்றால் அது தண்டனைக்குரிய குற்றச் செயற்பாடாகும்.

அதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தொடர்ந்தும் தங்களது பிரதேசங்களில் இருப்பதுடன், உரிய சுகாதார சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும். 

அதற்கமைய அந்த பிரதேசங்களிலிருந்து மேலும் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாவிட்டால், அந்த பகுதிகளை விடுவிக்க முடியும்.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுள் முக்கிய விதிமுறைகளான, முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் ஆகிய சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2,044 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபர்களுள் 1900 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பன்டுள்ளதுடன், மேலும் சிலருக்கு வழக்கு தாக்கல் செய்யவும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment