‘கொவிட்-19’ தொற்றை காரணம் காட்டி சம்பள விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்தி வைக்க வேண்டாம் - இராதாகிருஸ்ணன் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

‘கொவிட்-19’ தொற்றை காரணம் காட்டி சம்பள விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்தி வைக்க வேண்டாம் - இராதாகிருஸ்ணன்

‘கொவிட்-19’ தொற்றை காரணம் காட்டி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்தி வைக்க வேண்டாமென மலையக மக்கள் முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் 10 ஆவது ஆண்டு சிரார்த்த தின நிகழ்வு, ஹற்றன் ஸ்ரீ கிருஷ்ணபவான் கலாசார மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

வீ.இராதாகிருஸ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 5 வருடங்களாக 1000 ரூபாய் சம்பள உயர்வுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு கூட்டு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டும் ஆயிரம் ரூபாய் பிரச்சினை கவனத்தில் கொள்ளப்படவில்லை.

புதிதாக பதவிக்கு வந்துள்ள அரசாங்கத்தில் 1000 ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்று பிரதமர் நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட உரையில் கூறியுள்ளார். இருந்தும் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தான் சம்பள உயர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையே உள்ளது.

கூட்டு ஒப்பந்தம் இல்லாமல் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், இன்றுள்ள விலைவாசி அதிகரிப்புக்கு ஏற்ப தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாகப் பெற்றுக் கொடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களின் பொறுப்பாகும்.

சம்பள உயர்வு தொடர்பாக இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இணக்கம் எட்டப்படவில்லை. இந்த நிலையில் ‘கொவிட்-19’ காரணமாக சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த முடியாமல் ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டு காலம் இழுத்தடிக்கப்படும் போது தொழிலாளர்களுக்குத்தான் இழப்பு ஏற்படும் என்பதை மறந்து விடக் கூடாது. ஏனெனில், இறுதியாக செய்து கொள்ளப்பட்ட இரண்டு கூட்டு ஒப்பந்தங்களிலும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைப் பணம் கிடைக்கவில்லை. 

கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் திகதியிலிருந்துதான் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. எனவே, கூட்டு ஒப்பந்தம் கால தாமதம் ஆகும் போது அதனால் பாதிக்கப்படப் போவது தொழிலாளர்கள் தான் என்பதை மறந்து விடக் கூடாது.

உலகளாவிய ரீதியில் ‘கொரோனா’ பரவல் காரணமாக சந்திப்புகளை மேற்கொள்ள முடியாத நிலையில் உலகத் தலைவர்கள் சூம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்கள்.

அதேபோல், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு முக்கியமான ஒன்று என்பதைக் கவனத்திற் கொண்டு இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். அதை விடுத்து ‘கொரோனாவை’ காரணம் காட்டி பேச்சுவார்த்தையை இனிமேலும் இழுத்தடிக்கக் கூடாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment