'16 வயதுக்கு குறைந்தவர்களை தொழிலுக்கு இணைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும்' : அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

'16 வயதுக்கு குறைந்தவர்களை தொழிலுக்கு இணைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும்' : அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

16 வயதுக்கு குறைந்தவர்களை எந்த வகையான தொழிலுக்கும் உட்படுத்த முடியாது. அவ்வாறு இணைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று தொழில் அமைச்சின் கீழ் கடை, அலுவலக ஊழியர், பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல், குறைந்தபட்ச வேதனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சிறுவர்களை தொழிலுக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரியளவில் பேசப்பட்டு வந்திருக்கின்றது. ஐக்கிய நாடுகளின் யுனிசெப் அமைப்பு, சர்வதேச தொழில் நிறுவனம், யுனெஸ்கோ போன்ற அமைப்புகளினால் இது தொடர்பாக பல விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. யுனிசெப் அமைப்பின் ஆய்வின் பிரகாரம் உலகளாவிய ரீதியில் ஒரு மில்லியன் சிறுவர்கள் தொழிலுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

மேலும், சர்வதே தொழில் அமைப்பின் உலக சாதனையாக தெரிவிப்பது, 2008 முதல் 2012 வரையான காலப்பகுதியில் 168 மில்லியன் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகவும் அது உலக சிறுவர் தொகையில் 11 வீதமாகும். அவற்றில் 5 - 14 வயது பிள்ளைகளே இவ்வாறு தொழிலுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். ஆசிய மற்றும் ஆபிரிக்க வலயங்களிலே இது பெருமளவில் இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையை பொருத்தளவில், சர்வதேச தொழில் அமைப்பின் பிரகாரம் 2016 ஆகும் போது, முழு சிறுவர் தொகையில் 2.3 வீதம் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அதில், ஒருவீதம் ஆதாவது, 43, 714 பேர் சட்டவிரோத தொழில்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். அவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்களாவர். சிறுவர்களில் 36 வீதமானவர்கள் பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றன. 

மேலும் இலங்கையில் அடிப்டைக் கல்வி 16 வயது வரை இருக்க வேண்டும் என சட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் தொழில் மற்றும் ஏனைய துறைகளிலும் அதற்கு சமமாக சட்ட திருத்தங்களை மேற்கொண்டால்தான் சிறுவர்களுக்கான அடிப்படை கல்வி சட்டத்தை செயற்படுத்த முடியும். அதன் பிரகாரம் இலங்கை சர்வதேச தொழில் சமவாய சட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளதன் பிரகாரம் தொழில் புரிவதற்கான வயதில் தொழில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது கட்டாயமானதாகும்.’

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி சலுகையை பெற்றுக் கொள்வதற்கும் தொழில் வயதில் திருத்தம் கட்டாயமானதாகும் என்றார்.

No comments:

Post a Comment