தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி கோட்டாபய : 155 ஏக்கர் நிலப்பரப்பு - மொத்த முதலீடு 250 மில்லியன் டொலர் - முதல் தொகுதி இம்மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, January 14, 2021

தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி கோட்டாபய : 155 ஏக்கர் நிலப்பரப்பு - மொத்த முதலீடு 250 மில்லியன் டொலர் - முதல் தொகுதி இம்மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி

தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேர் டயர் உற்பத்தி தொழிற்சாலையான “பெரென்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ (Ferentino Tire Corporation PVT Ltd) நிறுவனம் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

ஹொரண, வகவத்த, பொருவடந்தவிலுள்ள முதலீட்டுச் சபை கைத்தொழில் வலயத்திற்கு சொந்தமான 155 ஏக்கர் காணியில் இந்த கைத்தொழில் வளாகம் அமைந்துள்ளது. 

முதல் கட்டத்திற்கான முதலீடு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் உலகின் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
250 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பீட்டை கொண்டுள்ள மொத்த திட்டமானது, Ceylon Steele Corporation (Pvt) Ltd நிறுவனத்தின் தற்போதைய தலைவர் பிரபல தொழிலதிபர் நந்தன லொகுவிதானவின் சிந்தனையில் உருவானதாகும். 

மைல்கல்லாக அமைந்திருக்கும் இத்திட்டம் இதுபோன்ற வசதிகளுடன் இலங்கையில் அமையும் முதலாவது திட்டம் என்பதுடன், விசேடமாக ளுருஏகள், இரு சக்கர வண்டிகள், முச்சக்கர வண்டிகள், ட்ரக்ஸ், பஸ்கள் போன்ற பயணிகள் கார் ரேடியல்களை (PCR) உற்பத்திசெய்யும் தென்கிழக்கு ஆசியாவிலேயே உள்ள பாரிய வசதியாகவும் காணப்படுகிறது. இது உள்ளூர் திறமைகளை அதிநவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் இணைப்பதாகவும் அமைகிறது.

SUV வாகனங்கள், மோட்டார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல உலகத்தரம் வாய்ந்த டயர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறன. 80% உற்பத்தி ஏற்றுமதி செய்யப்படுவதுடன், மீதமுள்ள 20% உள்ளூர் சந்தைக்கு வழங்கப்படுகிறது. நிறுவனத்தின் முதல் தொகுதி உற்பத்தி இந்த மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்சாலையின் நன்மைகளில், நாட்டின் ஏற்றுமதி சந்தை அபிவிருத்தி, ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உள்ளூர் இறப்பர் செய்கையாளர்களுக்கு கிடைக்கும் அதிக விலைகள் ஆகியவை அடங்கும்.

உற்பத்தித் துறையின் நிலையான எல்லைகளை கடந்து, தொழில்நுட்பத்துறை பதவிகளுக்கு தகுதியான பெண்களை நியமிக்க நிறுவனத்தின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொழிற்சாலை வளாகம் சூழல் நட்புடையதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை Ferentino டயர் கோபரேஷன் நிறுவனத்தின் தலைவர் நந்தன லொகுவிதான வரவேற்றார். நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி, டயர் உற்பத்தி நிறுவனத்தின் முழு செயல்முறையையும் பார்வையிட்டார்.
கடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகள் பெற்ற இங்கிரிய சுமணஜோதி வித்தியாலயத்தின் மாணவி யசஸ்மி தெவ்மிக்கு ஜனாதிபதி அன்பளிப்பொன்றை வழங்கினார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் சங்கைக்குரிய இத்தேபானே ஸ்ரீ தம்மாலங்கார தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர்களான விமல் வீரவங்ச, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்த அமரவீர, ரமேஷ் பதிரண, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, கனக ஹேரத், டீ.வீ. சானக, பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு பாரிய ஊக்கமளிக்கும் புதிய உற்பத்தி ஆலை, டயர் உற்பத்தியில் அதிநவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தை ஒரு உகந்த, உலகத் தரம் வாய்ந்த உற்பத்திக்கான உள்ளூர் கைவினைத்திறனுடன் ஒருங்கிணைக்கிறது. 
நேரடியாகவும் மறைமுகமாகவும் கணிசமான அளவு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு இத்திட்டத்துக்கான வசதிகளை இலங்கை முதலீட்டுச் சபை ஏற்படுத்திக் கொடுத்திக் கொடுத்துள்ளது.

Ferentino Tyres உள்நாட்டில் கிடைக்கும் இறப்பரை முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துவதுடன், இதன்மூலம் உலகத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் உள்ளூர் தொழில்துறையை உயர்ந்த மட்டத்துக்கு தள்ள முடியும். 

இத்திட்டத்தின் முதல் கட்டம் ஏற்கனவே நிறைவடைந்து செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், இரண்டாம் கட்டம் 2022 மார்ச் மாதம் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய Ferentino Tyre Corporation (Pvt) நிறுவனத்தின் தலைவர் திரு.லொகுவிதான குறிப்பிடுகையில், “வேலை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வருமானம் போன்ற தொற்று நோய்க்குப் பின்னரான சவால்களிலிருந்து உள்ளூர் பொருளாதாரம் மீள்வதற்கு மெதுவான உந்துதல் ஒன்று தேவைப்படும் தற்போதைய சூழ்நிலையில் இத்திட்டத்தை ஆரம்பிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். 

அடுத்த ஆண்டுகளில் இலங்கையை ஒரு தொழில்துறை மையமாக உயர்த்துவதற்கான தொலைநோக்குத் திட்டத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதிக்கும், அந்த ஒருங்கிணைந்த இலக்குக்காக அயராது உழைக்கும் அரசாங்கத் துறை அதிகாரிகள், குறிப்பாக இலங்கை முதலீட்டுச் சபை அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இலங்கை கொண்டிருக்கும் ஏனைய அற்புதமான வாய்ப்புக்களை ஆராய்வதில் விவேகமாகவுள்ள ஏனைய பிற முதலீட்டாளர்களை ஊக்குவிக்க Ferentino Tyres உதவும் என்றும் நம்புகின்றேன்” என்றார்.
இந்த உற்பத்தி வசதியானது உற்பத்தித் தொழில்துறையில் தற்பொழுது காணப்படும் நிலைமையை மாற்றும் வகையில், தொழில்நுட்ப ரீதியான பாத்திரங்களுக்கு தகுதிவாய்ந்த பெண்களை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கும் சமமான வாய்ப்புக்களை வழங்குவதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சுற்றுச்சூழல் தொடர்பிலும் அக்கறை கொண்டதாக இந்த ஆலை அமைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

சர்வதேச ரீதியில் பெயர் பெற்ற மரியாதைக்குரிய தொழில்முனைவரான நந்தன லொகுவிதான, பல துணை நிறுவனங்களைக் கொண்ட Ceylon Steel Corporation Ltd மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில உள்ள Onyx Group ஆகியவற்றின் தலைவராவார். 

அவருடைய ஏனைய முதலீடுகள் வருமாறு, துபாயில் உள்ள Marriot Al Jadaf ஹோட்டல், 2021 மே ஆரம்பமாகவிருக்கும் அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்படவுள்ள சீமெந்து அரைக்கும் ஆலை மற்றும் Marangoni Industrial Tyres Lanka (Pvt) Ltd என்பனவாகும்.

No comments:

Post a Comment