மாவீரர் தினத்திற்கும் கார்த்திகை விளக்கீட்டிற்கும் வித்தியாசம் தெரியாத சிங்கள பேரினவாதிகள் மக்களுக்கு இடையூறு விளைவித்துள்ளனர் : செல்வராஜா கஜேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

மாவீரர் தினத்திற்கும் கார்த்திகை விளக்கீட்டிற்கும் வித்தியாசம் தெரியாத சிங்கள பேரினவாதிகள் மக்களுக்கு இடையூறு விளைவித்துள்ளனர் : செல்வராஜா கஜேந்திரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது உறவுகளை நினைவு கூர அனுமதிப்பது அவர்களின் மனதை ஆற்றுப்படுத்தும் செயற்பாடாக அமைந்திருக்கும். ஆனால் கடந்த ஒரு வார காலமாக எமது மக்கள் வீடுகளில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னையின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

மாவீரர் தினத்திற்கும் கார்த்திகை விளக்கீட்டிற்கும் வித்தியாசம் தெரியாத சிங்கள பேரினவாதிகள் எமது மக்களுக்கு இடையூறு விளைவித்துள்ளமையை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார். 

பாராளுமன்றத்தில் நேற்று, 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு உளவியல் ரீதியிலான ஆற்றுப்படுத்தல் மிக முக்கியமானது. ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவொரு உளவியல் ஆற்றுப்படுத்தலும் இடம்பெறவில்லை. அவர்களின் மனநிலை எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்பது உங்கள் எவருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

எனவே மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது உறவுகளை நினைவு கூர அனுமதிப்பது அவர்களின் மனதை ஆற்றுப்படுத்தும் செயற்பாடும் கூட. மருத்துவ ரீதியில் சிந்தித்துப் பார்த்தல் கூட எமது நினைவேந்தளுக்கு அனுமதித்திருக்க வேண்டும். 

எனினும் கடந்த ஏழு நாட்களும் எமது மக்களை வீடுகளுக்குள் சிறைப் படுத்தியுள்ளனர். எனவே அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். 

1958, 1977, 1983 ஆம் ஆண்டுகளில் அரசு படுகொலைகளை மேற்கொண்டபோது அதற்கு எதிராக தற்பாதுகாப்புக்காக போராட முற்பட்டது மிருகத்தனமா அல்லது படுகொலைகளை செய்து விட்டு அரசு என்ற போர்வையில் இங்கிருந்து எல்லாவற்றையும் மூடி மறைப்பது மிருகத்தனமா ? அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு எம்மை தொடர்ந்தும் அச்சுறுத்தலாமென கனவு காணக்கூடாது.

அதேபோல் நினைவேந்தல் 27 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் நேற்றைய முன்தினம் தமிழர்களின் மத ரீதியிலான கார்த்திகை விளக்கிடும் நாள். அந்த கார்த்திகை விளக்கிடுவதற்காக எமது மக்கள் விளக்குகளை வைத்துள்ளனர். அதற்காக விளக்கு கொளுத்திய பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். 

யாழ் பல்கலைக்கழக மாணவன் முருகையா தர்சிகன் கைது செய்யப்பட்டுள்ளான். மத ரீதியில் ஒரு நிகழ்வை விளங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு உங்களின் மனநிலைகள் மூர்க்கத்தனமாக உள்ளது என்றார்.

No comments:

Post a Comment