மனிதர்களால் ஏற்படுத்தும் அழிவோ, இயற்கை அழிவோ, எந்தவொரு அச்சுறுத்தல்களின் போதும் மக்களை பாதுகாக்க படைவீரர்களின் பங்களிப்பு அசியமாகும் - பாதுகாப்புச் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

மனிதர்களால் ஏற்படுத்தும் அழிவோ, இயற்கை அழிவோ, எந்தவொரு அச்சுறுத்தல்களின் போதும் மக்களை பாதுகாக்க படைவீரர்களின் பங்களிப்பு அசியமாகும் - பாதுகாப்புச் செயலாளர்

இராணுவ தலைவர்கள் இன்று போன்று என்றுமே சகல துறைகளிலும் பங்களிப்பு செய்பவர்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தெரிவித்தார்.

மனிதர்களால் ஏற்படுத்தும் அழிவோ, இயற்கை அழிவோ, எந்தவொரு அச்சுறுத்தல்களின் போதும் மக்களை பாதுகாக்க படைவீரர்களின் பங்களிப்பு அசியமாகும். அதேபோன்று சிறந்தவொரு எதிர்காலத்தை இலக்காக கொண்ட ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கை” அடிப்படையாகக் கொண்டு தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கும் இராணுவம் பங்களிக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் இராணுவ கெடெட் அதிகாரிகளின் பிரியாவிடை நிகழ்வு தியத்தலாவையிலுள்ள இலங்கை இராணுவ கலாசாலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

தியத்தலாவைக்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தியத்தலாவ இலங்கை இராணுவ கலாசாலையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஏ கே ஜி கே யு குணரட்ன ஆகியோர் வரவேற்றனர்.

95ஆவது முறையாக இலங்கை இராணுவ கலாசாலையில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த பாதுகாப்புச் செயலாளருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

கண்கவரும் வகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது பயிற்சிகளை முடித்துக் கொண்ட 187 அதிகாரிகள் வெளியேறினர். இவர்களில் 88, 88 பீ ஆட்சேர்ப்பு மற்றும் 18ஆவது பெண் ஆட்சேர்ப்பைச் சேர்ந்த பெண் அதிகாரிகள், மாலைதீவு அதிகாரி ஒருவரும், சம்பிய இராணுவத்தைச் சேரந்த இரண்டு அதிகாரிகளும் அடங்குவர்.

இந்த பிரியாவிடை நிகழ்வானது இலங்கை இராணுவ கலாசாலை கலண்டரில் பதியப்படுள்ள வருடாந்த மிக முக்கியமான வைபவங்களில் ஒன்றாகும். மேற்படி ஆட்சேர்ப்புக்களில் பயிற்சிகளை முடித்தவர்களில் சகல துறைகளிலும் சிறப்பு திறமைகளை வெளிக்காண்பித்த புதிய இளம் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் இராணுவ அதிகாரிகளுக்கான மரியாதை அணிவகுப்பு மற்றும் பிரியாவிடை வைபவமானது அதிமேதகு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களின் பங்குபற்றுதல்களுடன் இடம்பெறும்.

இதேவேளை, வெளிநாட்டு இராணுவப் பயிற்சி கல்லூரிகளில் பயிற்சிகளை முடித்துக் கொண்ட பதினாறு இலங்கை இராணுவ அதிகாரிகளும் பிரியாவிடை பெற்று வெளியேறினர். இவர்களில் சீன இராணுவ கல்லூரியில் பயிற்சிகளை முடித்துக் கொண்ட 04 அதிகாரிகளும், இந்திய இராணுவ கல்லூரியில் பயிற்சிகளை முடித்துக் கொண்ட 02 அதிகாரிகளும், பாகிஸ்தான் இராணுவ கல்லூரியில் பயிற்சிகளை முடித்துக் கொண்ட 09 அதிகாரிகளும், ஐக்கிய இராச்சியத்திலுள்ள ரோயல் இராணுவ கல்லூரியில் பயிற்சிகளை முடித்துக் கொண்ட அதிகாரி ஒருவரும் இதில் அடங்குவர்.

பயங்கரவாதத்தை ஒழிக்க பங்களித்த சிறந்த இராணுவத் தலைவர்கள் அனைவருக்கும் சான்றாக காணப்படும் இலங்கை இராணுவ கலாசாலை வளாகத்தில் இருந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் :- மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழித்து வெற்றிவாகை சூடிய இராணுவம் என்ற அடிப்படையில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த உலகின் தலைசிறந்த இராணுவம் என்ற ஆசிர்வாதம் எமக்கு உண்டு

உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்புக்கு எதிராக மிகவும் தைரியமாக போராடிய துணிச்சல் மிக்க அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக சமாதானத்தை விரும்பும் இந்த நாட்டு மக்கள் மிக நீண்டகாலமாக எதிர்பார்த்த அமைதியை உருவாக்க வழி வகுத்தது. எனவே, தனது இறுதி தருவாய் வரை தேசத்தின் எதிரிக்கு எதிராக போராடிய அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு நான் என்றும் மரியாதை செலுத்துகின்றேன்.

இலங்கை இராணுவம் தேசத்தின் பாதுகாவலர்கள் என்ற வகையில் பாதுகாப்பு குடும்பத்திற்கு புதிதாக இணைந்து கொண்ட அதிகாரிகளையும் வரவேற்கின்றேன் என்று தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், இலங்கையர்கள் என்ற வகையில் எமது வெற்றிக்கு தூணாக விளங்கிய இலங்கை இராணுவத்தில் இணைந்து கொள்ள கிடைத்தமைக்காக நீங்கள் அனைவரும் பெருமையடைய வேண்டும். எனவே, நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இது யாருக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பாகும் என்றார்.

தனது உரையின் போது பெற்றோரை விழித்து உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், இராணுவத்தில் இணைந்துக் கொண்ட புதிய அதிகாரிகள் இன்று தொடக்கம் தெளிவான வாழ்க்கைப் பாதையில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். எதிர்காலத்தில் இவர்கள் தொழில் ரீதியில் மேலும் பல நன்மைகளை அடையவுள்ளனர் என்றார். 

தமது இளம் பெண் மற்றும் ஆண் பிள்ளைகளை இராணுவத்தில் இணைந்துக் கொள்ள வழிகாட்டியதற்காக இளம் அதிகாரிகளின் பெற்றோர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் :- தங்களது பிள்ளைகளுக்கு ஆயுதப் படைகளின் தளபதியான ஜனாதிபதியினால் இந்த கொமிஷன் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தமது வாழ்கையின் முதற் படியை ஆரம்பித்துள்ளனர். இது மற்றவர்களினால் பெற முடியாத ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றார்.

ஒரு இராணுவ தலைவரின் கீழ் வரும் மக்களின் பெருமதியான வாழ்க்கை தொடர்பில் விளக்கமளித்த பாதுகாப்புச் செயலாளர், நீங்கள் அனைவரும் எந்த சூழ்நிலையிலும் உங்களின் கீழுள்ள வீரர்களை பாதுகாக்க வேண்டும். உங்களின் கட்டளையின் கீழுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அத்துடன் சகல தளபதிகளும் முதலில் நல்ல தலைவர்களாக மாற வேண்டும் என்றார்.

மேலும், எமது சகல படைவீரர்களும் எமது நாட்டு பிரஜைகளின் மகன், மகள், கணவன், மனைவி மற்றும் ஒரு தந்தை அல்லது தாய் என்று குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலாளர், எனவே, அவர்களை செலவழிக்கும் பொருளாக பயன்படுத்த அதிகாரமில்லை என்று அறிவுறுத்திய அவர், சட்டரீதியான இலக்கை அடைவதற்கு மாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கையில் மாத்திரம் சரியான நேரம், இடத்தை பயன்படுத்த வேண்டும் என்றார்.

எந்தவொரு விடயத்திலும் அவசர தீர்மானம் எடுப்பது நல்லதல்ல மாறாக தீர்மானம் ஒன்று மேற்கொள்வதற்கு முன்னர் பகுத்தறிவை பயன்படுத்த வேண்டும் என்றும் சரியான தீர்மானங்களை எப்போதும் எடுக்க வேண்டும் என்றும் புதிய அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் பயிற்சியளிக்கப்பட்ட வெளிநாட்டு அதிகாரிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் :- அனைத்து வெளிநாட்டு கெடெட் அதிகாரிகளும் கொவிட் தொற்றுநோய்களுக்கு மத்தியில் இலங்கையில் தங்கியிருந்த அவர்கள் சந்தோசங்களை அனுபவித்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன் என்றார். அத்துடன் வெளிநாட்டு அதிகாரிகள் தத்தமது வீடுகளை பாதுகாப்பான முறையில் சென்றடைய பிரார்த்திப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த இளம் அதிகாரிகளை வருங்கால இராணுவத் தலைவர்களாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பு மிக்க சேவைகளுக்காக, பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதம அதிகாரி, இராணுவத் தளபதி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், இலங்கை இராணுவ கலாசாலையின் கட்டளை அதிகாரி உட்பட பணியாளர்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

தியத்தலாவ, இராணுவ கலாசாலையிலுள்ள நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்திய பாதுகாப்புச் செயலாளர், தனது விஜயத்தின் ஓர் அங்கமாக இரு மரக்கன்றுனளையும் நட்டினார்.

மகா சங்கத்தினர்கள், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரட்ன, இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், இராணுவ பிரதம அதிகாரி, வெளிநாட்டு பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கெடெட் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment