காலி, தெத்துகொட பகுதியில், கொரோனா காரணமாக உயிரிழந்த முஸ்லிம் நபர் ஒருவரின் ஜனாஸாவை தகனம் செய்யாது, அதி குளிரூட்டியில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரன நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா மரணம் என சட்ட வைத்திய அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட முஸ்லிம் நபர் ஒருவரின் ஜனாஸா தொடர்பில், தகனம் செய்யுமாறு, காலி மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்ட பின்னர், அதற்கு எதிராக உயிரிழந்த நபரின் உறவினர்கள் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதே மேலதிக நீதவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரண இந்த உத்தரவை பிறப்பித்தார்.
காலி, கராபிட்டியைச் சேர்ந்த 84 வயது நபர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு அவரது ஜனாஸாவை எரிக்க வேண்டும் என, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவோ பொறுப்பேற்கவோ முடியாது என தெரிவித்திருந்த நிலையில், விடயம் நீதிமன்றிற்கு சென்றது.
இதன் போது, சட்டத்தரணிகள் கஸ்ஸாலி ஹுசைன், பிரசாந்த டி சில்வா, எஸ்.எம்.எம். நிலாம், பைரூஸ் மரிக்கார், இல்ஹாம் சமாஷ், துஷார வராபிட்டிய ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது தமது வாதத்தை முன்வைத்த சட்டத்தரணிகள், உடலங்களை எரிப்பதா - புதைக்க அனுமதிப்பதா என்ற சந்தேக நிலையில் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன, தற்காலிகமாக ஜனாஸாக்களை வைத்துப் பாதுகாக்க குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் ஐந்தைத் தருமாறு நீதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், அதனை மீறி எரிப்பது அவசியமற்றது என வாதாடிய சட்டத்தரணிகள், சுகாதார பணிப்பாளர் காத்திருக்கும் அந்த 'இறுதி' முடிவு வரும் வரை இந்த ஜனாஸாவையும் எரிக்க அனுமதி மறுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கருத்தில் எடுத்த காலி மேலதிக நீதவான், உடலை கராபிட்டிய வைத்தியசாலையில் குளிரூட்டிப் பாதுகாக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment