(எம்.எப்.எம்.பஸீர்)
காலி - ரத்கம களப்பு பகுதியிலிருந்து தெதர்லாந்து தேரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 60 வயதான நெதர்லாந்தின் ஜீவரத்ன தேரர் என அறியப்படும் தேரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பிச்சைப் பாத்திரம் ஏந்தி யாத்திரிகம் செய்யும் போது இந்த தேரர் காணாமல் போயிருந்தார். அது தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட பொலிஸார், அவ்வாறான பின்னணியிலேயே நேற்று இரவு சடலம் மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்து காலி - ரத்கம பகுதியிலுள்ள தபோவனம் ஒன்றில் மத போதனையில் ஈடுபட்ட குறித்த தேரரின் மரணம் தொடர்பில் மர்மம் துலக்க விஷேட விசாரணைகள் காலி பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் ஆலோசனைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம், ரத்கம களப்பு பகுதிக்கு சென்ற காலி நீதிவான் ஹர்ஷன கெக்குணவல, கை கால்கள் கட்டப்பட்டு, தலையில் கல்லொன்றும் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்த தேரரின் சடலத்தை அவதானித்து, பிரேத பரிசோதனைகளுக்கும் மேலதிக விசாரணைகலுக்கும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் தேரரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக காலி, கராபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ரத்கம பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment