குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் கைது, விளக்கமறியல் என்பன சட்டத்துக்கு அப்பாலான நடைமுறைகள் ஊடாக இடம்பெற்றுள்ளதாக அறிவிக்குமாறு கோரி அவர் சார்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்றையதினம் ஷானி அபேசேகர சார்பில் கம்பஹா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை கோரிக்கையை அம்மன்று நிராகரித்துள்ள பின்னணியிலேயே, குறித்த கைது நடவடிக்கையை மையபப்டுத்தி இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகளான, சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம், அனைவரும் சமனாக சட்டத்தால் பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற அரசியலமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையும், சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடைமுறைக்கு இணங்கவன்றி, எவரும் கைது செய்யப்படக்கூடாது, கைது செய்யப்படுவதற்கான காரணம் கைது செய்யப்படுபவருக்கு அறிவிக்கப்படல் வேண்டும் எனும் அரசியலமைப்பின் 13 (1) ஆம் உறுப்புரை ஆகியன ஷானி அபேசேகரவின் கைது விடயத்தில் மீறப்பட்டுள்ளதாக கூறியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 126 ஆவது உறுப்புரைக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சி.சி.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் டி சில்வா, பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி.டி.ஜே. நிஷாந்த, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
59 வயதான ஷானி அபேசேகர, மொஹம்மெட் சியாம் கொலை விவகாரத்தின் குற்றவாளியான முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் சட்ட விரோத ஆயுத கிடங்கை கைது செய்த விவகாரத்தை மையப்படுத்தி, பொய் சாட்சிகளை உருவாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், அந்த விசாரணையின் உண்மையான நிலைவரம், சட்டமா அதிபர் அது குறித்து வழங்கிய ஆலோசனைகள் உள்ளிட்டவையும் மனுவில் இணைக்கப்பட்டுள்ளன.
இதனைவிட, வாஸ் குனவர்தனவை கைது செய்யும் போது, அவர் ஷானி அபேசேகரவுக்கு விடுத்த மரண அச்சுறுத்தல், கடந்த ஜனவரி 27ஆம் திகதி இரவு 11.23 மணிக்கு அடையாளம் தெரியாத நபரால் ஷானி அபேசேகரவுக்கு தொலைபேசியில் குடும்பத்தாரை கொலை செய்வதாக வந்த அச்சுறுத்தல் தொடர்பிலும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஷானி அபேசேகரவின் விசாரணைகலின் போது, ஏதும் சாட்சியங்களை பெற அழைத்து செல்லும் போதோ வேறு சந்தர்ப்பங்களிலோ அவரது பாதுகாப்பை உறுதி செய்ய முதல் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபருக்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரியுள்ள மனுதாரர், மனுவை விசாரணைக்கு ஏற்குமாறும், அரசியலமைப்பின் 12 (1), 13 (1) ஆம் உறுப்புரைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும் கோரியுள்ளார்.
அத்துடன் 3 மில்லியன் ரூபா நட்ட ஈட்டினைப் பெற்றுத்தரவும் வழக்குக் கட்டணங்களை பெற்றுத்தரவும் இம்மனு ஊடாக மனுதாரர் கோரியுள்ளார்.
இதனிடையே, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் மோஹன மென்டிஸ் ஆகியோரின் பிணை கோரிக்கை நேற்று நிராகரிக்கப்பட்டுள்ளன.
இவர்களது பிணை கோரிக்கையானது கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர நிராகரித்தார். பிணைக் கோரிக்கையை நிராகரிப்பதர்கான காரணத்தை நீதிபதி திறந்த மன்றில் கூறவில்லை என்பது விஷேட அம்சமாகும்.
No comments:
Post a Comment